முதலீடுகளை கொண்டு வந்து கட்டமைப்புகளை பெருக்கி, தொழில் வளத்தை அதிகரித்து வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான எந்த சிந்தனையோ, திட்டமோ இந்த அரசிடம் இல்லை என்பதை உணர்த்துகிறது இன்றைய நிதி நிலை அறிக்கை. ஆறரை லட்சம் கோடி கடனை எப்படி அடைக்க போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.மாநிலங்களுக்கு ரூபாய் 1 லட்சம் கோடி 50 வருடங்களுக்கு வட்டியில்லா கடன் கொடுப்பதாக மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய நிலையில், தமிழகத்திற்கு எவ்வளவு நிதியை பெறப்போகிறோம், எப்படி, இதில் முதலீடு செய்யப்போகிறோம் என்பதற்கான திட்டமிடல் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. மற்ற மாநிலங்கள் கடந்த வருடம் தங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ள நிலையில், தமிழகம் பின் தங்கியுள்ளது தி மு க அரசின் நிர்வாக கோளாறினால் தான்.
கடந்த வாரம் கூட முதல்வரும் மற்ற தி மு கவினரும் மத்திய அரசு 20000 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது என்றெல்லாம் விமர்சனம் செய்த நிலையில், இன்று நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசின் நிதி மற்றும் நிலுவை அதிகளவில் வந்து விட்டது என்று குறிப்பிட்டிருப்பது, தி மு க இவ்வளவு காலம் மத்திய அரசு நிலுவை தர வேண்டும் என்று பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.சென்ற வருடத்திய நீட்சியாக தான் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது.
பணவீக்கத்தை கணக்கிட்டு நிதி நிலை அறிக்கையை உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது.மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000 என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு இப்போது பயனாளிகளுக்கான தரவுகளை சேமித்து கொண்டிருக்கிறோம் என்பது மக்களை ஏமாற்றும் செயலே அன்றி வேறில்லை.கல்வி கடன் ரத்து என்று மாணவர்களை ஏமாற்றி வாக்கு சேகரித்து விட்டு இன்று அதே மாணவர்களை நட்டாற்றில் விட்டு விட்டதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்குவதை தவிர்த்து அந்த நிதியை நேரடியாக மாநிலத்திடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும் போது நடைபெறும் ஊழல்களை பாஜகவினர் வெளிக்கொண்டு வந்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே இந்த கோரிக்கை என்று எண்ணத்தோன்றுகிறது. பல்வேறு திட்டங்களில் நடைபெறும் ஊழல்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு, நீதிமன்றங்களில் அவ்வழக்குகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே, மக்களுக்கு பயனளிக்காத இந்த நிதி நிலை அறிக்கை தமிழக முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு உதவாது என்பதோடு அடுத்த தலைமுறையை ஏமாற்றியுள்ள நிதி நிலை அறிக்கையே!
நாராயணன் திருப்பதி.செய்தி தொடர்பாளர்,பாரதிய ஜனதா கட்சி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















