தி.மு.க அரசு கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கக்கூடிய சத்துணவு பெட்டகத்தில் ஊழல் செய்த்திருக்கிறது என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விளக்கமளித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தி.மு.க அரசு கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கக்கூடிய சத்துணவு பெட்டகத்தில் செய்திருந்த ஊழல் குறித்து நாங்கள் பேசியிருந்தோம். அதற்குப் பல அமைச்சர்கள் நகைப்புக்குரிய வகையில் விளக்கமளிக்கின்றனர். இவர்கள் இன்னும் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வின் ஊழல் தொடர்பான ஆதாரம் இதோ…
எங்களின் முதல் குற்றச்சாட்டு… பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்தைக் கறுப்பு பட்டியலில் வைத்திருக்கிறோம் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும் இந்த டெண்டரில் அதே நிறுவனத்துக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்… ஆவின் நிறுவனம் கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கக்கூடிய சத்துணவு பெட்டகம் தயாரிக்க தரநிர்ணய சான்றுடன் தயாராக இருந்து, அதற்குப் பின்பு கடந்த மார்ச் மாதம் 7, 15, 31 ஆகிய தேதிகளில் மூன்று அமர்வுகளாக ஆலோசித்து முடிவு செய்ததற்குப் பின்பு, ஒரு சிலரின் தலையீட்டின் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி ஒப்பந்தம் மாற்றிக் கொடுக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன?