தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு அரிசி தவிர கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மாநில அரசால், மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள, 67 சதவீதம் மக்களுக்கு இந்திய உணவு கழகம் மூலம் மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை வழங்கி வருகிறது.ஒரு கிலோ அரிசியை 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, 30 ரூபாய் மானியம் போக, மாநில அரசுகளுக்கு கிலோ 3 ரூபாய்க்கு வழங்கி வந்தது. தமிழக அரசு அந்த 3 ரூபாயையும் மானியமாக அறிவித்து, ரேஷன்கடைகளில் இலவசமாக, அரிசி வழங்கி வந்தது.கடந்த ஜனவரி முதல் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை அனைத்தும் இலவசமாக வழங்கி வருகிறது.
இப்போது, தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமைக்கு தமிழக அரசு எந்த தொகையும் செலவிடுவதில்லை என, இந்திய உணவு கழக அதிகாரிகள் தெரித்தனர்.
இது குறித்து, இந்திய உணவு கழக கோவை மண்டல மேலாளர், மணிபூஷன் குமார் சுமன் கூறியதாவது:தமிழக அரசின் பொது வினியோக திட்டத்துக்கு என, ஆண்டுக்கு 36 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வந்தது. இப்போது கடந்த ஜனவரி முதல் தமிழகத்துக்கு தேவையான ரேஷன் அரிசி முழுவதையும், மத்திய அரசுதான் இலவசமாக வழங்கி வருகிறது.
இந்தியாவில் பிறக்கும் 36 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடனும், 32 சதவீதம் குழந்தைகள் எடைக் குறைவாகவும் பிறப்பதாக, தேசிய குடும்ப நல அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.இதை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் முதல் இந்திய உணவு கழகம் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
எப்.சி.ஐ., மூலம் வழங்கப்படும் கோதுமை, அரிசி உள்ளிட்ட தானியங்கள் முழுமையாக தர பரிசோதனை செய்யப்பட்டு, தரமான தானியங்களை மட்டுமே, பொது வினியோகத்துக்கு வழங்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.