பிரிவினையில் பிறந்து, பிரிவினையில் வளர்ந்து, பிரிவினையை பாதையாக வகுத்துக்கொண்டு பயணம் செய்கின்ற கட்சி திமுக. திமுகவின் தாய் கழகமான திராவிடர் கழகம், இந்தியாவுக்கு “சுதந்திரம் வேண்டாம்” என்று வெள்ளையர்களின் கால்களை பிடித்து கெஞ்சியது. லண்டனில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை மட்டுமாவது ஆட்சி நடத்துங்கள் என்று மன்றாடியது.
திராவிடர் கழகத்தின் குழந்தையான திமுகவின் முன்னணி தலைவர்களான சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களெல்லாம் சுதந்திர போராட்ட காலத்தில் இளைஞர்களாக இருந்தும், சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற அனைத்து வாய்ப்புகளும் இருந்தும், “இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம்” என்ற கொள்கையின் காரணமாக, சுதந்திர போராட்டத்திற்கு ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.
ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு “தனி திராவிட நாடு” என்ற பிரிவினைவாத கொள்கையை மக்களிடம் விதைத்து, தங்களின் நயவஞ்சக விஷத்தை அடுக்குமொழி வசனங்கள் மூலம் இளைஞர்களிடம் திணித்து, அவர்களையும் பிரிவினைவாத கோஷம் எழுப்ப வைத்தார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாடு சுதந்திரம் அடைந்த தினத்தையும், குடியரசு தினத்தையும் இன்று வரை கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். திராவிடர் கழகம், திமுக, இவற்றின் உதிரி கழகங்கள் அனைத்தும் இந்தக் கொள்கையில் இருந்து இதுவரை மாறவில்லை.
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், 2011 – ஆம் ஆண்டு வரை, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றியதே இல்லை. அதன் பிறகும் அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, அவர் அவருக்குப்பின் திமுக தலைவராக முடிசூட்டப்பட்ட மு.க.ஸ்டாலினோ தேசியக்கொடியை ஏற்றியதில்லை.
பாஜக போன்ற தேசபக்த இயக்கங்கள் மற்றும் தேசத்தை தெய்வமாக போற்றும் பத்திரிகைகள், இணையதள ஊடகங்கள், திமுகவின் இத்தகைய தேச விரோத போக்கை, மக்களிடம் கொண்டு சென்றதன் விளைவாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் -15 அன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி அவமதித்தார். அதாவது தேசிய கொடியை ஏற்றியதும் அந்தக் கொடிக்கு உரிய மரியாதையை செலுத்தும் வகையில் வணக்கம் செலுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.
ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் அதற்கு உரிய வணக்கம் செலுத்தாமல் சென்றுவிட்டார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மோடி அரசு ரத்து செய்தபோது,“காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை” என்று திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை மூலமாக தெளிவு படுத்தியது திமுக.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் திமுக இளைஞரணி சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்களில், பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நீக்கி, இந்திய வரைபடத்தை வெளியிட்டு இருந்தது.
இதனை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டினார் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவின் தேச விரோத செயல் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.
திமுகவின் இந்த தேச விரோத செயல், தேச பக்தர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இருந்து, அந்த தேசவிரோத வீடியோவை நீக்கம் செய்துள்ளார்.