திருமலையில், ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு கன்னியாமாதமான புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நவராத்திரி நடக்கும் சமயங்களில் இந்த பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி, திருவோண நட்சத்திரதன்று நிறைவு பெறும்.
ஏழுமலையான் திருமலையில் அடி வைத்த நாளில், அவர் பிரம்ம தேவனை அழைத்து, உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்ஸவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாக புராணங்கள் கூறுகிறது.
அதை மகிழ்வுடன் ஏற்று, பிரம்ம தேவர் கன்னியா மாதமான புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவு பெறும் விதம், ஒன்பது நாட்கள் உற்ஸவத்தை நடத்தினார். பிரம்மன் நடத்திய உற்ஸவம் என்பதால், இது பிரம்மோற்ஸவம் என்று வழங்கப்பட்டு வருகிறது.
பிரம்மோற்ஸவ நாட்களில், காலை 9:00 – 11:00 மணி வரையிலும், இரவு 8:00 – 10:00 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளது.
வாகன சேவையின் போது அன்னமாச்சாரியா திட்டத்தின் சார்பில் கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
வாகன சேவையில் ஈடுபடுத்தப்படும் யானைகள், குதிரைகள், காளைகள் உள்ளிட்டவைகளுக்கு ஒரு மாத காலத்திற்கு முன்பிருந்தே பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வாகன சேவையின் போது அதிக அளவில் மேளதாளங்கள், வாத்தியகருவிகள் இசைக்கப்படுவதால், அவற்றின் ஓசையால் விலங்குகள் பாதிப்பதிற்குள்ளாவதை தடுக்க தேவஸ்தானம் இந்த பயிற்சிகளை அளித்து வருகிறது.
திருமலை திருப்பதி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு செப்.,18 முதல், 26 வரையிலும், அக்., 15 முதல், 23 வரையிலும் அஷ்டதளபாத பத்மராதனம், திருப்பாவாடை, கல்யாணோற்ஸவம், ஊஞ்சல்சேவை, சஹஸ்ரதீபாலங்கர சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வருடாந்திர பிரம்மோற்ஸவத்தில் செப்., 18ம் தேதி கொடியேற்றம், 22ம் தேதி கருட வாகனம், 23ம் தேதி தங்கத்தேர், 25ம் தேதி திருத்தேர், 26ல் தீர்த்தவாரி, கொடியிறக்கம் ஆகியவை நடக்கவுள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.













