உதயநிதி வருகை நான்கு மணி நேரம் கால்கடுக்க நின்ற பெண் காவலர்கள்! காற்றில் பறந்த முதல்வரின் உத்தரவு!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வி.வி.ஐ.பி.,- வி.ஐ.பி.,யின் செல்லும் கான்வாய் பாதைகளில் பெண் காவலர்கள் பாதுகாப்பு, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த அதிரடியை காமெடியாகிவிட்டார் முதல்வரின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள், சேலத்தில், அமைச்சர் உதயநிதியின் ‘கான்வாய்’ பாதையில், பெண் காவலர்களை, நான்கு மணி நேரம் பாதுகாப்புக்காக நிற்க வைத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் கான்வாய் பாதை மட்டுமின்றி எந்த ஒரு வி.வி.ஐ.பி – வி.ஐ.பி.,யின் கான்வாய் பாதைகளில் பெண் காவலர்களை பாதுகாப்பு, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது’ என, உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திர பாபு, சுற்றறிக்கை மூலமும் எச்சரிக்கை செய்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் உதயநிதி, கொண்டலாம்பட்டியில், இடி விழுந்து பலியான மாணவனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து, விழுப்புரத்துக்கு, மதியம், 1:00 மணிக்கு காரில் புறப்பட்டு செல்வதாக பயண திட்டம் அமைக்கப்பட்டு இருந்தது.
இதற்காக, நேற்று மதியம், 12:30 மணிக்கு ஹோட்டலில் இருந்து, கொண்டலாம்பட்டி ஏரிக்கரை சாலையில் உள்ள மாணவனின் வீடு வரையிலும், தொடர்ந்து, மாநகர போலீஸ் எல்லையான அயோத்தியாபட்டணத்தை தாண்டியும், பெண் போலீசார், எஸ்.எஸ்.ஐ.,க்களை, மேலதிகாரிகள் நிறுத்தி இருந்தனர்.
ஆனால், உதயநிதி ஹோட்டலில் இருந்து மாலை, 4:15 மணிக்கு புறப்பட்டார். கொண்டலாம்பட்டியில் உள்ள மாணவனின் வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார். காரில், விழுப்புரம் சென்றார்.
மாலை, 4:40 மணிக்கு தான், கான்வாய் பாதையில் பணியில் இருந்த பெண் போலீசார் விடுவிக்கப்பட்டனர். கான்வாய் பாதையில், 90 பெண் எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் லாவண்யாவிடம் கேட்ட போது அவர் கூறுகையில், ”கான்வாய் பாதையில் யாரையும் தனித்தனியாக நிறுத்தவில்லை. இது குறித்து விசாரிக்கிறேன்,” என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















