தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகிறது. இது மத்திய அரசால் பிரிவினை பேச்சாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆளூநர் தனது உரை முடிவில் ஜெய்ஹிந்த் என்று கூறாமல் பேச்சை முடித்து இருக்கிறார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஜெய்ஹிந்த்தை கொச்சைப் படுத்தி பேசியுள்ளார். இதற்கு முதல்வர் தரப்பில் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசு இந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. வரும் காலங்களில் இந்த பிரச்சனைகளை வளரவிடாமல் தமிழகத்தில் இருந்து மேற்கு மண்டலம் பிரிந்து யூனியன் பிரதேசமாக மாறும் என்று செய்திகள் வரத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் ஆளுமை மிக்கத் தலைவர் இல்லாத காரணத்தினால் தமிழ்நாடு பிரிப்பதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு வராது. ஏற்கனவே பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் தமிழகத்தை வடதமிழகம் மற்றும் தென் தமிழகம் என பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார். இனிமேல் இந்தப் பிரச்சனை வேகமெடுக்கும். தமிழ்நாடு வெகு விரைவில் நிறம் மாறுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.
தமிழ்நாட்டை பிரித்து கொங்குநாடு என்ற இன்னொரு மாநிலம் பிரிக்கப்படும் என்ற கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினரும் அமைதி காப்பது சம்மதத்திற்கு அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொங்கு நாடு என்ற மாநிலம் பிரிந்தால் தமிழகத்திற்கு பாதிப்பு அதிகம் ஆகும். ஏன் என்றால் மிக முக்கியமான தொழில் நகரங்களான சேலம் ,ஈரோடு ,நாமக்கல் ,கரூர், திருப்பூர், கோவை ,பொள்ளாச்சி ஆகிய நகரங்கள் கொங்கு நாட்டிற்குள் வந்து விடும். ஆகவே தமிழ் நாடு பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கும். இந்த நகரங்கள் தான் தமிழகத்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற நகரங்கள்.
மேலும் சோழ மண்டலத்தின் டெல்டா பிரதேசத்தில் விவசாய தண்ணீருக்கான தேவை. அமராவதி, பவானி, காவிரி ஆகிய நதிகள் கொங்கு பகுதியை தாண்டித்தான் சோழமண்டலத்திற்குள் வரமுடியும். தமிழ்நாடு மீண்டும் கர்நாடகத்துடன் போராடி ,கொங்குநாட்டிடம் போராடி தண்ணீர் பெற வேண்டிய சூழல் உருவாகும்.ஆகவே இந்த ஒன்றியம் ஒன்றியம் என்று பேசுகின்ற உதவாக்கரைகள் யோசனை செய்து ஒன்றுபட்ட தமிழ்நாடு அவசியம் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சனைக்கு முடிவு செய்ய வேண்டும்.பிரிவினைவாதம் பேசுகின்ற தேசவிரோதிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.