மத்திய அரசின் மேக் இன் இந்தியா (Make in India) திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கிலான தற்சார்பு இந்தியா திட்டத்தின் பலனாக, தற்பொழுது நடைபெறும் மாற்றங்கள்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ‘தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை’ சார்பில் “இந்திய தொழில் கூட்டமைப்பின் கூட்டணி உச்சிமாநாடு 2021” தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்கவிழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. இது மிக மிக முக்கியமான விலை ஆகும். ஏனெனில் இது குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கும் மலிவு விலையில் உள்ளது.
ஸ்மார்ட்போன்களின் விலையை மேலும் குறைப்பதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.கடைசி மைல்வரை ஸ்மார்ட்போன் சென்றடையும் வகையில் வினியோக சங்கிலி செலவுகளை குறைத்தல் மற்றும் இந்தியாவின் வடிவமைப்பு திறன்களை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிப்புகள் உற்பத்தியை அதிகரிக்க, இதுபோன்ற மேலும் பல முயற்சிகள் அரசாங்கத்தால் வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன.வருவாயை அதிகரிப்பதற்கும் ஏழைகளுக்கு சேவைகளை அதிகரிப்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”