பா.ஜ.கவின் தேசிய மகளிரணி கூட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது. அனைத்து மாநில மற்றும் தேசிய மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்,
“நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க-வின் செல்வாக்கு நாடு முழுவதும் அதிகரித்திருப்பதும், நம் வேட்பாளர்களுக்கு பெண்களின் ஆதரவு இருப்பதும் தெளிவாகியிருக்கிறது. குறிப்பாக உத்தப்ரபிரதேச தேர்தல் முடிவுகள் பா.ஜ.க மீது பெண்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தை மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்.
பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அதிகாரத்தை பா.ஜ.க உறுதி செய்திருக்கிறது. சாதாரண நிலையில் இருக்கும் ஒரு பெண்ணும் கட்சிப் பதவிகளில் உயர முடியும்” என்றார்.
தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைப்பெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ”மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதை அந்த மாநிலத்தின் பெண் முதல்வர் தடுக்க தவறிவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
நன்றி:- விகடன்