வரும் 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன.
மாநில அரசுகள் தங்கள் சாதனைகளை, பெருமைகளை குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் மூலம் பறைசாற்ற விரும்புவது நியாயமானதே. ஆனால், 50, 60 அலங்கார ஊர்திகளை அணிவகுப்பில் இடம் பெறச் செய்வது நடைமுறை சாத்தியமற்றது.
குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் மட்டும் இடம் பெறுவதில்லை. முப்படைகள், தேசிய மாணவர் படை, சாரணர், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். இதற்கே மூன்று மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும். 50, 60 ஊர்திகள் அணிவகுப்பில் வலம் வந்தால் மேலும் சில மணி நேரங்கள் ஆகலாம். அவ்வளவு நேரமும் பார்வையாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது சாத்தியமில்லை. அதுமட்டுமல்ல இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
பாதுகாப்பு, கொரோனா கட்டுப்பாடுகள், பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளை முடிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பல மத்திய அமைச்சகள், மாநில அரசுகள் குறிப்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளை, ஓவியம், சிற்பம், இசை, நடனம், வடிவமைப்பு ஆகிய துறைகளின் வல்லுர்கள் அடங்கிய குழுதான் ஆண்டுதோறும் தேர்வு செய்கிறது. முதலில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அலங்கார ஊர்தியின் மையக் கருத்து, அவற்றை வெளிப்படுத்தும் விதம், ஊர்தியில் இடம் பெறும் ஓவியம், சிற்பம், பாடல், இசை, நடனம், உடையலங்காரம், வண்ணம், வடிவமைப்பு மற்றும் தரம் ஆகிய அம்சங்களை மதிப்பிட்டு தான் ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 21 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதியில் இன்னமும் குறையும்.
அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதில் மத்திய அரசின் பங்களிப்பு, அரசியல் தலையீடு எதுவும் இல்லை. இதற்கு சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகளை சிறந்த உதாரணம். பாஜக ஆட்சியில் வீரப்ப மொய்லி, சசிதரூர் போன்ற காங்கிரஸ் தலைவர்களும், திமுகவைச் சேர்ந்த இமையமும், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளனர்.
உண்மை இவ்வாறு இருக்க விடுதலைப் போராட்ட வீரர்களான வ.உ. சிதம்பரம் பிள்ளை, வேலுநாச்சியார் ஆகியோர் பற்றிய தமிழக அரசின் அலங்கார உதவிக்கு பாஜக அரசு அனுமதி மறுத்து விட்டதாக தவறாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு,தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெளிவான விளக்கத்துடன் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதனை மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் எதிராக திருப்பி விடும் பிரச்சாரத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் செய்து வருகின்றன. இதில் அவர்களுக்கு தற்காலிக வெற்றிகள் கிடைத்திருக்கலாம். ஆனால், இப்போது மக்கள் உண்மையை உணரt தொடங்கி விட்டனர். எந்த ஒரு பொய்யும் நீண்ட காலம் நிலைக்க முடியாது. இது தகவல் தொழிநுட்ப யுகம். இங்கு ஒவ்வொருவரும் பத்திரிகையாளர் தான். ஒவ்வொருவரும் புலனாய்வு பத்திரிகையாளர் தான். சில நிமிடங்கள் செலவழித்தால் போதும், எந்த ஒரு விஷயத்திலும் உண்மை எது, அவதூறு எது தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. எனவே இனியும் திமுகவின் இந்த அவதூறு பிரசாரம் எடுபடாது. திமுகவிடம் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அவர்கள் என்ன சொன்னாலும் அதனை கொண்டு சேர்க்க சிலர் இங்கே துணை புரியலாம். ஆனாலும், உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது.
எனவே அவதூறு பிரச்சாரங்களை கைவிட்டு ஆக்கபூர்வமாக செயல்பட திமுக அரசு முன்வர வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் மோசமான கலாச்சாரத்தை திமுக விட்டொழிக்க வேண்டும்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ திமுக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்