சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனாவுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இது கட்சியினுள்ளே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஆதவுக்கு வரும் தேர்தலில் சீட் வழங்கவும் முடிவு செய்துள்ளார் வி.சி.க. தலைவர் திருமா. இது மேலும் கட்சியினுள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு வழக்குகளில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன்தான் ஆதவ் அர்ஜூன். பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் அவருக்கு தான் விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் எனவும் மிக பெரிய பொறுப்பை தூக்கி கொடுத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்
வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of Common) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜூனா, கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். அண்மையில் திருச்சியில் விசிக மாநாட்டையும் ஆதவ் அர்ஜுன் தான் ஒருங்கிணைத்தார். விசிக மாநாடு முடிந்த அடுத்த சில வாரங்களில் ஆதவ் அர்ஜுனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனுக்கு எதன் அடிப்படையில் இவ்வளவு பெரிய பொறுப்பு வழங்கப்படுகிறது, என்ற கேள்விகள் எழுந்துள்ளது. பதவிக்காக பணம் கைமாறியதா என்ற சந்தேகமும் கட்சி நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது. மேலும் இம்முறை எப்படியும் ஆதவ் அர்ஜுனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். ஆதவுக்கு சீட் ஒதுக்கும் பட்சத்தில் விசிக-வின் சிட்டிங் எம்பி-யான ரவிக்குமாருக்கு சீட் கிடைக்காமல் போகும்.
திமுக கூட்டணியில் கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்டது விசிக. சிதம்பரத்தில் திருமாவளவனும் விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றார்கள். இதில், ரவிக்குமார் உதயசூரியனில் போட்டியிட்டு வென்றார். இம்முறை திமுகவிடம் மூன்று தொகுதிகளை எதிர்பார்க்கிறது விசிக. அதில் ஒன்று பொதுத் தொகுதி.
கட்சியின் அண்மை வரவான ஆதவ் அர்ஜூனாவுக்காகவே பொதுத் தொகுதி ஒன்றை இம்முறை பிடிவாதமாகக் கேட்கிறார் திருமா. திமுக தரப்பிலும் பலவிதத்திலும் நல்ல நட்புறவில் இருக்கும் ஆதவ், நேரடியாக ஸ்டாலினிடமே பேசி தனக்காக கள்ளக்குறிச்சி தொகுதியை ரிசர்வ் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆதவுக்கு சீட் கொடுக்க ஒத்துக்கொண்டாலும் விசிகவுக்கு இம்முறை 3 தொகுதிகளைக் கொடுக்க திமுகவுக்கு விருப்பம் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்கெனவே வழங்கிய தொகுதிகளை குறைக்கமுடியுமா என திமுக சிந்தித்து வருகிறது. இந்த நிலையில், விசிகவுக்கு மட்டும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் மற்ற கட்சிகளும் அதையே சாக்காக வைத்து கூடுதல் தொகுதிகளை கேட்டு கொடிபிடிக்கும்.
எனவே, விசிகவுக்கு 3 தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அப்படி ஒருவேளை, மூன்று தொகுதிகள் கிடைக்காமல் போனால் ரவிக்குமாருக்கு இம்முறை சீட் கிடைப்பது கானல் நீராக மாறியுள்ளது. இதனால் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் ரவிக்குமார் திருமாவுடன் நட்பில் தான் உள்ளார் என்பது போல் வெளியே காட்டி கொள்கிறார்கள். ஆனால் புகைச்சல் இருந்து கொண்டுதான் உள்ளது.
கட்சிக்காக எத்தனை முறை சிறை சென்றிருப்போம் அடிகள் வாங்கிருப்போம் இப்போது இந்த கட்சி இந்த அளவிற்கு வளர்ந்ததே நம்மால் தான் எனவும் பணத்திற்காக கட்சியை திருமா விற்றுவிடுவார் என புலம்ப தொடங்கியிருக்கிறார்கள் விசிககாவிற்காக உழைத்தவர்கள். அதிருப்தியில் உள்ள அனைவரிடமும் ரவிக்குமார் பேசிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமா கருதினால், தான் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு அந்த இடத்தை ரவிக்குமாருக்கு வழங்க முன்வரலாம். ஆனால், அத்தகைய முடிவை திருமா எடுப்பாரா என்பது சந்தேகம் தான்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















