தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,அரசை, ஆட்சியாளர்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் உண்டு. வரலாற்றிலேயே அதிக அளவு விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும், எல்லை மீறிய வசவுகளையும் எதிர்கொண்ட ஒரே அரசு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தான். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோதிலிருந்தே, அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை பல ஊடகங்கள் செய்து வருகின்றன. அவற்றையெல்லாம் பிரதமர் மோடியும், பாஜகவினரும் பொருட்படுத்தியதே இல்லை. காரணம் பிரதமர் மோடியும் பாஜகவும் நம்புவது மக்களை மட்டுமே.
அரசை, ஆட்சியாளர்களை விமர்சிக்க உரிமை இருக்கிற அதே நேரத்தில், நாட்டை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. கருத்து சுதந்திரத்தின் எல்லை என்பது ஆட்சியாளர்கள் வரை தான். நாட்டின் மீதல்ல. நூற்றாண்டை கொண்டாட இருக்கிற புகழ்பெற்ற ஆனந்த விகடன் குழுமம், பிரதமர் மோடியை, பாஜக அரசை, கொச்சைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, இந்திய திருநாட்டையும், அதன் 140 கோடி மக்களையும் அசிங்கப்படுத்தி இருக்கிறது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.
அமெரிக்க அதிபரின் முன்பு, இந்திய பிரதமரின் கை, கால்களில் விலங்கிட்டு இருப்பது போன்ற கார்ட்டூன் வரைந்திருப்பது, பிரதமர் மோடி மீதான தாக்குதல் அல்ல. பிரதமர் பதவியில் இருப்பவர்கள் மாறலாம். ஆனால், பிரதமர் பதவி என்பது மரியாதைக்குரியது. அதை கொச்சைப்படுத்தி இருப்பதை ஏற்கவே முடியாது. அதனால்தான் விகடன் பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். 140 கோடி இந்தியர்களின் எண்ணமும் அதுதான்.
தமிழகத்தில் திமுக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து சமூக ஊடகங்களில் ஒரு வார்த்தை எழுதினாலே கைது, சிறை என்று அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள். உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பலமுறை எச்சரித்தும் கூட சமூக ஊடகங்களில் திமுக அரசை விமர்சிப்பவர்களை வேட்டையாடி வருகிறது ஸ்டாலின் அரசு.
ஆனால், இன்று நாட்டை கொச்சைப்படுத்திய விகடனுக்கு ஆதரவாக பத்திரிக்கை சுதந்திரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. பத்திரிகை சுதந்திரம் பற்றி பாஜகவுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். ஏனெனில், மூன்றாவது முறையாக தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்தும் ஊடக சுதந்திரத்தை மதிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. எங்கள் மீது எத்தனை விமர்சனங்கள் வைத்தாலும் பொறுத்துக் கொள்வோம். நாட்டை கொச்சைப்படுத்துவதை ஒரு நாளும் பொறுக்க மாட்டோம்.