தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் ஏ.பி டி வில்லியர்ஸ் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று கூறிய தனது கருத்துக்கு அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
டி வில்லியர்ஸ் சொன்ன தவறான தகவல்
இதனிடையே, இந்திய முன்னணி வீரரான விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. அதேநேரத்தில், விராட்கோலிக்கு தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளித்து, அதற்கான காரணங்களை யூகிக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக்கொள்வதாகவும் பி.சி.சி.ஐ அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்நிலையில், விராட் கோலி விடுப்பு குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் யூ டியூப் நேரலையில் பேசும்போது, “எனக்கு நன்றாக தெரியும். அவர் நலமுடன் இருக்கிறார். அவர் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுகிறார். அதனால் தான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. வேறு எதையும் நான் இப்போது உறுதிப்படுத்தப்போவதில்லை.
கோலி – அனுஷ்கா தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். குடும்ப நேரம் மற்றும் குடும்ப விஷயங்கள் இப்போது அவருக்கு முக்கியம். பெரும்பாலான மக்களுக்கு குடும்பம் தான் முக்கியமானது என நினைக்கின்றேன். அதனை வைத்து விராட் கோலியை மதிப்பிட்டுவிட முடியாது” என கூறியிருந்தார்.
டி வில்லியர்ஸ் கொடுத்த இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. மேலும், விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், இது குறித்து அவர்கள் எந்தவித தகவலையும் வெளிவிடவில்லை.
அந்தர் பல்டி அடித்த டி-வில்லியர்ஸ்
இந்த நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று கூறிய தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் ஏ.பி டி வில்லியர்ஸ் யு-டர்ன் அடித்துள்ளார். மேலும் “தவறான தகவலை” பகிர்ந்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஏ.பி டி வில்லியர்ஸ் பேசுகையில், “எனது யூடியூப் சேனலில் நான் கூறியது போல் குடும்பம் முக்கியமானது. அதே நேரத்தில் நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். நான் தவறான தகவலை பகிர்ந்து விட்டேன். அந்த தகவல் தவறானது. உண்மையில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. என்னால் செய்ய முடிந்தது அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பது மட்டுமே.
விராட் கோலி பின்தொடரும் மற்றும் அவரது கிரிக்கெட்டை ரசிக்கும் முழு உலகமும் அவரை நன்றாக வாழ்த்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரது இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவர் இதிலிருந்து வலுவாகவும், சிறப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் திரும்பி வருவார் என நம்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.