சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெபசோபியா உள்ளிட்ட 10 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சரவணன் மீது பண மோசடி செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார்கள். வங்கியில் லோன் எடுத்து பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி, அதனை திருப்பி கேட்க சென்றால் நாய்களை விட்டு கடிக்கவிடுவதாக பள்ளி ஆசிரியை உட்பட பலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெபசோபியா உள்ளிட்ட 10 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வகிக்கும் சரவணன் என்பவர் தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் கடனிற்காக வங்கிகளை நாடி இருப்பவர்களை கண்டறிந்து லோன் வாங்கித்தருவதாக கூறி நம்ப வைத்தார்.
பிறகு தங்களின் ஆவணங்களை பெற்று வங்கி உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்களில் கடனை பெற்று சரவணன் லோன் பணத்தை எடுத்து கொண்டார். EMI பணத்தை கட்டிய சரவணன் கமிஷன் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். இந்த நிலையில் லோன் கொடுத்த வங்கிகள் பணத்தை கட்டும் படி தங்களை தொல்லை செய்து வருவதால் தங்களை ஏமாற்றிய சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்கள், பணத்தேவை உள்ளதை அறிந்து கொண்டுதான் எங்களை சரவணன் ஏமாற்றி விட்டார் என்றும் பணத்தை தரும்படி வீட்டிற்கு சென்று கேட்டால் நாய்களை விட்டு கடிக்க வைக்கிறார் என்றும் நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.