பீகாரில் ‘ஐக்கிய ஜனதா தளம்’ கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சராக இக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இருக்கிறார். இக்கட்சி தேசிய அளவில் பாஜக தலைமையிலான ‘தேசிய ஜனநாயக கூட்டணியில்’ இருக்கிறது.
பீகார் உள்ளிட்ட வட மாநில மக்களுக்கு எதிரான மனநிலையை தமிழகத்தில் விதைக்கிறது திமுக. நாடாளுமன்றத்திலேயே பீகார் உள்ளிட்ட மாநிலங்களை மாட்டுமூத்திர மாநிலங்கள் என இழிவுபடுத்தியவர் திமுக எம்பி செந்தில்குமார். பீகார் உள்ளிட்ட வட மாநில மக்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் திமுகவினர். இப்போதும் அதை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதையெல்லாம் ரசிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பீகாரில் நாடகமாடி வருகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. ஆனால் தேர்தலுக்கு குறைந்த காலமே இருக்கும் நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சிறப்பு திருத்த பணி எனில், ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலை கணக்கில் எடுக்காமல், புதியதாக வாக்காளர் பட்டியலை உருவாக்குவதாகும். வழக்கமாக இப்படியான நடைமுறை மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.
ஆனால், இந்த முறை சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பழைய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இது பெரும் சலசலப்பை உருவாக்கியிருந்தது. உயிரிழந்தவர்கள், போலியான முகவரியை கொண்டிருப்பவர்கள் என்று 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை நீக்கியிருக்கிறது என்று குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டது. இதற்காக ‘வாக்காளர் அதிகாரம்’ என்கிற பெயரில் ராகுல் காந்தி பேரணியை தொடங்கினார். நேற்று பீகாரின் முசாபர்பூரில் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் எப்போதும் போல் பாஜக மத்திய அரசை குற்றம் சாட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில், பீகார் பேரணியில் ஸ்டாலின் பங்கேற்றிருந்தது குறித்து பிரசாந்த் கிஷோர் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறார்.”பீகார் குழந்தைகள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டன. அப்படிப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து மு.க. ஸ்டாலின் பீகாருக்கு வந்திருக்கிறார். எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டபோது ஸ்டாலின் எங்கு இருந்தார்? இது காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவின் மோசமான குணத்தை காட்டுகிறது. தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, கூலி வேலை செய்வது பீகாரிகளின் மரபணுவில் இருக்கிறது என்று பேசியிருந்தார். இப்படியாக பீகாரிகளை அவமதிப்பவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது” என்று விமர்சித்திருந்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















