மாநில அதிகாரம் பேசி, மக்கள் நலம் பறிபோயிற்று!! நவநாகரிக காலத்தில் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் வாகனங்கள் இன்றியமையாததாகிவிட்டன. இருசக்கர வாகனங்கள் பெட்ரோலிலும் பிற வாகனங்கள் டீசலிலும் இயங்குகின்றன. இந்தியா இன்று வரையிலும் வாகன எரிப்பொருட்களுக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோலிய நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சில்லரை விலையை தினமும் மாற்றியமைக்கும் உரிமையைப் பெற்றுக் கொண்டன.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் சில்லரை விலை குறைவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் குறித்துப் பேசுகின்ற போது, மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி ஒன்றையொன்று குற்றம் சுமத்துவதிலேயேக் குறியாக இருக்கின்றன.
விலையேற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் மத்திய, மாநில அரசுகளின் அபரிமிதமான வரிவிதிப்புகளே ஆகும்.எனவே தான், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று, பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.கடந்த 5 ஆண்டுகளாக, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டுமென்று பேசாத மேடையில்லை, அரங்குகளில்லை.
2017-ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டுமென்று ஸ்டாலினும் அவரது புதல்வர் உதயநிதியும் தொடர்ந்து பேசி வந்தனர்.2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக “டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைவாசியைக் குறைக்க வேண்டுமெனில், அதை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும்”என்று தேர்தல் நெரங்களில் பல கூட்டங்களில் பேசினார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து நான்காவது மாதம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதுவரை 2 ஜி.எஸ்.டி. கூட்டங்கள் நடைபெற்றுவிட்டன.முதல் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்டு முழங்கிய பழனிவேல்தியாகராஜன், இரண்டாவதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லை.லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியமான நிகழ்ச்சி நிரலே டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தான்.
”வளைகாப்பிற்குத் தேதி கொடுத்ததால், கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை” என்பது போன்றச் சொத்தைக் காரணங்களைச் சொல்லி, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக்கான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பழனிவேல்தியாகராஜன், தனது துறையின் மூத்த அதிகாரி மூலம், எழுதிவைக்கப்பட்ட அறிக்கையை அந்த கவுன்சிலில் வாசித்திருக்கிறார்.
அதில், ”எஞ்சியுள்ள சில உரிமைகளையும் நாங்கள் (தமிழக அரசு) இழக்க விரும்பாததால், பெட்ரோல், டீசல் உற்பத்திப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி எல்லைக்குள் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று அரசு அதிகாரி மூலம் பதிவு செய்திருக்கிறார்.இதே கருத்தை கடந்த அரசு சொன்னபோது, அதை அடிமை அரசு என்று விமர்சனம் செய்தார்கள்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால், அனைத்து தரப்பு மக்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகிறார்கள்.பெட்ரோல், டீசல் உற்பத்திப் பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதன் மூலம், இப்பொழுது இருக்கக் கூடிய விலையிலிருந்து 50%க்கு கீழ் விலையும் குறையும், வெளிப்படைத்தன்மையும் இருக்கும்.
எனவே அதற்கென்று கூட்டப்பட்டக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு தனது கருத்தை வலுவாக வலியுறுத்தியிருந்தால், பிற மாநிலங்களாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, இப்பொழுது பெட்ரோல், டீசல் பொருட்களும் ஜி.எஸ்.டி. வளையத்திற்குள் வந்திருக்கும்; அதனால் 140 கோடி மக்களும் பலன் பெற்றிருப்பார்கள்; ஆனால், மாநில அதிகாரம் குறித்துப் பேசி, அந்த அரிய சந்தர்ப்பத்தையும் நழுவ விட்டுவிட்டார்கள்.
”ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது” என்றும், ”வெள்ளையறிக்கை வெள்ளரிக்காயாகத்தான் இருக்கும்” என்றும் முன்பே நாம் சொன்னோம். அதற்கேற்றாற்போல இப்பொழுது, பெட்ரோல், டீசல் பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.தேர்தலுக்கு முன்பு வாக்குகள் வாங்கும் வரையிலும் அள்ளிவீசிய வாக்குறுதிகள் எல்லாம், நூறே நாட்களில் ஆடிக்காற்றில் பறந்ததைப் போல பறந்துவிட்டன.ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து வாக்குறுதிகளுமே வெற்றுறுதிகளாக மாறி வருகின்றன.மாநிலங்களுக்கான அதிகாரம் மக்களுக்கு சேவை செய்யவே!
மக்கள் வாக்களித்தது அவர்களின் பசியைப் போக்கவே; ஆட்சியாளர்களின் அதிகாரப் பசியைத் தீர்க்க அல்ல.”வளைகாப்பே முக்கியம்; விலைக்குறைப்பு முக்கியமல்ல!””மாநில அதிகாரம் பேசி, மக்கள் நலம் பறிபோயிற்று!! என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA தெரிவித்துள்ளார்.