நீட் தேர்வு தோல்வி அடைந்த மாணவன் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் நீட் தேர்வு அரசியல் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையின் மரணமடைந்த மாணவன் ஜெகதீஸ்வரனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அவரது நண்பரான ஃபயாஸ்தீன் செய்து சேனல்களுக்கு பேட்டியளித்து பிரபலமானார்
அவர் நீட் தேர்வை விமரிசித்து செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்தார். ரொம்ப வேகமாக பேசிய ஃபயாஸ்தீன் ரூ.25 லட்சம் கொடுத்துதான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன் என்றும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் பாலாஜி மருத்துவக் கல்லூரியில் தான் படிக்கிறேன் என கூறினார்
இந்த நிலையில் கன்னியாகுமரியில்நீட் தேர்வு குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவரின் நண்பர் ஒருவர் ஆவேசமாக பேசியிருக்கிறார். நான் 25 லட்சம் ரூபாய் கொடுத்துதான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன் என்று அந்த மாணவரே கூறுகிறார்.
அந்த மாணவரின் பெயர் ஃபயாஸ்தீன். அவர் எந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் தெரியுமா? திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான பாலாஜி மருத்துவக் கல்லூரியில் தான் அந்த மாணவர் சேர்ந்திருக்கிறார்” என்றார்.
திமுகவினர் தொடங்கும் தனியார் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கி கொடுத்து, அவர்கள் வசூல் செய்வதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு சீட்டையும் 1 கோடி, 2 கோடி என்று விற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் என்றும் அதனால்தான் திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.
“2006 முதல் 2011 வரை 5 ஆண்டு காலத்தில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறிய அண்ணாமலை, “திமுக 6 முறை ஆட்சியில் இருந்தும் வெறும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளைதான் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி ஒரே நேரத்தில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்திருக்கிறார். இதுதான் திராவிட மாடலுக்கும் மோடி மாடலுக்கும் உள்ள வித்தியாசம்” எனவும் எடுத்துரைத்தார்.