காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றி, தற்போது தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய மாண்புமிகு ஆர்.என்.இரவி அவர்கள்.
இவரின் முழு பெயர் ரவீந்திர நாராயண் ரவி. 1952 ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தார்.
1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.
மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டவர் தான் தற்போதைய தமிழக ஆளுநர்.
உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இவர் பணியாற்றியபோது உளவு துறையின் இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது.
எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை அவர் காவல் நோக்கில் ஆராய்ந்து அரசு பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்தார்.
இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் அவர் முக்கியப்பங்காற்றினார்.
2012 ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார், அதன் பின் அவர் தேசிய நாளிதழ்களில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.
பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்,
அங்கு புலனாய்வு சமூகத்தின் தலைவராகவும், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிகாட்டியாக செயல்பட்டார்.
2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அமைந்தது. நரேந்திர மோடி பிரதமரான சில மாதங்களில் வடகிழக்கு மாநிலங்களின் உள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை அடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.அங்கு சிறப்பாக செயல்பட்டு நாகலாந்து மக்களிடையே நற்பெயர் பெற்றார். மாவோயிஸ்ட்களின் கரத்தை கட்டுப்படுத்தினர்.
அவர் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து. 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மிகமிக முக்கியமான இத்தருணத்தில் தமிழக ஆளுநராகப் பதவியேற்கவுள்ள அவரது பணியால் தமிழ் மாநிலம் தேசிய நீரோட்டத்தில் நிலைத்து நிற்கும் என நம்புகிறேன்