தேசிய அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாநில கட்சிகள் உட்பட 26 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாஜகவிற்கு எதிராக இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார்கள்.
இந்த கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகியவை. தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக உள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். இந்த கட்சிகள் இணைந்து இரண்டு ஆலோசனை கூட்டங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அல்லது அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் விரைவில் பாஜவுடன் இணைவார் என காங்கிரஸ் தலைவர் கூறி தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளார்.மேலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புது தில்லியிலுள்ள 7 நாடளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது ஆம் ஆத்மியை கொதிப்படைய செய்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் : காங்கிரஸ் தில்லியில் கூட்டணி தேவைப்படவில்லை என்றால், இந்தியா கூட்டணியில் நாங்கள் இருப்பதற்கும் அர்த்தமில்லை. இது நேர விரையம்தான். இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுப்பது குறித்து எங்கள் கட்சி தலைமை முடிவு செய்யும் எனக் குறிப்பிட்டார். இதனால் எதிர்கட்சிகளின் ‛‛இந்தியா” கூட்டணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது
எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பா.ஜ.கவுடன் இணைந்தார்.
எதிர்கட்சிகளின் ‛‛இந்தியா” கூட்டணியில் உள்ள கட்சிகளை பா.ஜ.க தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் சரத்பவாரை மட்டும் யாரும் விமர்சனம் செய்யவில்லை.இதனால் சரத்பவார் மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றசாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்.
எதிர்கட்சிகளின் ‛‛இந்தியா” கூட்டணி உருவான பிறகு சரத்பவார் பிரதமர் மோடியுடன் புனேவில் நடந்த நிகழ்ச்சியில் மேடையை பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடியும், ‛‛காங்கிரஸ் கட்சியால் சரத்பவாருக்கு பிரதமர் வாய்ப்பு கைநழுவி போனதாக பேசினார். இதற்கு மறுப்பு தெரிவிக்காத சரத்பவார், தனது அண்ணன் மகன் அஜித்பவாரை சமீபத்தில் ரகசியமாக சந்தித்து பேசினார்.
மகாராஷ்டிரா எதர்க்கட்சி கட்சி காங்கிரஸ் தலைவர் விஜய் வடித்வார் கூறுகையில், ‛ஏன் அஜித் பவார் அடிக்கடி சரத்பவாரை சந்தித்து பேசி வருகிறார். தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை 2 ஆக பிரிந்த நிலையில் பா.ஜ.க மாநிலத்தில் தனெக்கென்று ஒரு நல்ல நிலையை எட்டியுள்ளது.
மேலும் சரத்பவாரின் உதவியை பா.ஜ.க விரும்புகிறது. அவரது ஆதரவு இருந்தால் மகாராஷ்டிராவில் அதிக தொகுதிகளை கைப்பற்றலாம் என பாஜக நினைக்கிறது. சரத்பவாரின் மனதை மாற்றி பா.ஜ.க பக்கம் இழுத்து வந்தால் முதல்வர் பதவி தருவதாக அவர் கூறியிருக்கலாம். இதனால் தான் அஜித் பவார் அடிக்கடி சரத்பாவாரை சந்திக்கிறார்” என தெரிவித்து இருந்தார்.
மேலும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவருமான பிருத்வி ராஜ் சவான் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அல்லது அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க ஆஃபர் வழங்கப்படுகிறது என தெரிவித்து இருந்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தற்போது ஓரணியில் உள்ள நிலையில் அவரது இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.