மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மற்றும் பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை நகர் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.கவில் ஏற்கனவே சின்னம் மாறி போட்டியிட்ட விவகாரத்தில் 4 எம்.பி.க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மற்றும் பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோருக்கு சின்னம் மாறி போட்டியிட்ட விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்ப சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதுதான் தமிழக அரசியலில் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் நாமக்கல் தொகுதியில்,மதிமுகவின் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டி ஆர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். கட்சி மாறி போட்டியிட்டது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி. 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கினை தொடர்ந்தார். அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தற்போது வேகம் எடுத்து வரும் நிலையில்
திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம், சென்னை சிட்டி சிவில் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வயது 61, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்சமது 52 ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் முறையே பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
மனித நேய மக்கள் கட்சியின் விதிமுறை 6வது பிரிவின்படி வேறு கட்சி உறுப்பினர்கள், மனித நேய மக்கள் கட்சியில் உறுப்பினராக முடியாது. 23வது பிரிவின்படி, மனித நேய மக்கள் கட்சியில் தனி சின்னத்தில் போட்டியிடலாமே தவிர மற்ற கட்சி சின்னங்களில் போட்டியிட கூடாது என உள்ளது.ஆனால் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல்சமது ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் தங்களை தி.மு.க., உறுப்பினர்கள் என தெரிவித்து, அக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். எனவே, அவர்கள் மனித நேய மக்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தொடர கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு நேற்று அக்டோபர் 28 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, அப்துல்சமது, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இருவரும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களாக தொடரும் பட்சத்தில் ம.ம.க. உறுப்பினராகவோ, தலைவர், பொதுச்செயலாளர் பொறுப்புகளில் தொடரமுடியாது. கட்சியில் இருப்பதாக தெரிவித்தால் எம்.எல்.ஏ., பதவிகளை இழக்க வேண்டிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: பெரிய கட்சிகள் தேர்தல் தேரத்தில் சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்போது, பிடிவாதமாக அவர்களது சின்னத்திலேயே போட்டியிட வைக்கிறார்கள். இது ஜனநாயக விரோதம். தவிர, தேர்தல் விதிமுறைகள்படி வேட்பாளர் எந்தக் கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெறுகிறாரோ, அக்கட்சியின் உறுப்பினராகவே கருதப்படுவார். மேலும் ஏற்கனவே உள்ள வழக்கில் நான்கு எம்.பிகளின் பதவி பறி போகும் நிலையில்தான் உள்ளது.
நான்கு எம்.பிகளின் மீதான வழக்கினை 4 மாதத்திற்குள் முடித்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 5 மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது,அதற்குள் இந்த வழக்கை முடித்து வைத்தால் தான் இது போன்ற செயல்கள் வரும் தேர்தல்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது.வழக்கின் இறுதியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டால் மாநில தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெறும்.என்றார்.