இந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இருந்து மே 31 ஆம் தேதி வரை இந்திய ரயில்வே 82.27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது ஏப்ரல் 1, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை ஏற்றிச்சென்ற 65.14 மில்லியன் டன்களுடன் ஒப்பிடும்போது 25சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல் 1, 2020 முதல் ஜூன் 9, 2020 வரை இந்திய ரயில்வே தனது தடையில்லா இருபத்து நான்கு மணி நேர (24X7) சரக்கு ரயில் சேவைகளின் மூலம் மொத்தம் 175.46 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது.
24.03.2020 முதல் 09.06.2020 வரை 31.90 லட்சத்திற்கும் அதிகமான வேகன்கள் விநியோகச் சங்கிலியை செயல்பட வைக்க பொருள்களை எடுத்துச் சென்றன. இவற்றில், 17.81 லட்சத்துக்கும் மேற்பட்ட வேகன்கள் உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள், பெட்ரோலிய பொருள்கள், நிலக்கரி, உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை நாடு முழுவதும் கொண்டு சென்றன. ஏப்ரல் 1, 2020 முதல் ஜூன் 9, 2020 வரை, ரயில்வே 12.56 மில்லியன் டன் உணவு தானியங்களை ஏற்றிச் சென்றது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 6.7 மில்லியன் டன்களாக இருந்தது.
இது தவிர, 22.03.2020 முதல் 09.06.2020 வரை மொத்தம் 3,861 பார்சல் ரயில்களும் இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டுள்ளன, அவற்றில் 3,755 ரயில்கள் நேர அட்டவணை ரயில்கள். இந்தப் பார்சல் ரயில்களில் மொத்தம் 1,37,030 டன் சரக்கு ஏற்றப்பட்டுள்ளது. கோவிட் -19 ஐத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கின் போதும், அதற்குப் பிறகும், சிறிய பார்சல் அளவுகளில் மருத்துவப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்களை எடுத்து சென்றது மிகவும் முக்கியமானது. முக்கியமான இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின் வர்த்தக (e-commerce) நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர்களுக்கு விரைவான வெகுஜன போக்குவரத்துக்கு ரயில்வே பார்சல் வேன்களை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் ரயில்வே நேர அட்டவணைப்படி பார்சல் சிறப்பு ரயில்களை ரயில்வே துறை இயக்குகிறது..
இந்த பார்சல் சிறப்பு ரயில்களுக்கான பாதைகளை மண்டல ரயில்வே தொடர்ந்து கண்டறிந்து அறிவிக்கிறது. தற்போது இந்த ரயில்கள் தொண்ணூற்றாறு (96) வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
பார்சல் சிறப்பு ரயில்களை இந்த வழிகளில் மேலும் இயக்க அடையாளம் காணப்பட்டுள்ளன:
- நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையே வழக்கமான இணைப்பு.
- மாநிலத் தலைநகரங்கள்/முக்கியமான நகரங்களிலிருந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பு.
- நாட்டின் வடகிழக்குப் பகுதிக்கான இணைப்பை உறுதிசெய்தல்.
- இதர பகுதிகளிலிருந்து (குஜராத், ஆந்திரா) அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் வழங்கல்.
- பிற அத்தியாவசியப் பொருள்களை (விவசாயப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை) உற்பத்தி செய்யும் பகுதிகளிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வழங்குதல்.