நாகை மீனவன்’ என்ற யூடியூப் சேனலோடு தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை இலங்கைக்கு ₨1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தியதாக எழுந்த புகாரில் சோதனை
நாகப்பட்டினம் துறைமுகம் அருகில் இருந்து இலங்கைக்குப் படகில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவலை அடுத்து, நாகப்பட்டினம் துறைமுகம் பகுதி, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணி நேற்று இரவு தீவிரப்படுத்தப்பட்டது. நாகை துறைமுகம் அருகே ஒரு படகில் இருந்து மற்றொரு படகுக்கு மூட்டைகள் ஏற்றிக்கொண்டிருப்பதை சுங்கத் துறை அதிகாரிகள் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், சுங்கத் துறை அதிகாரிகளைப் பார்த்த படகில் இருந்தவர்கள், இரண்டு படகுகளுடன் அவர்களின் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, படகில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 10 மூட்டைகளில் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 280 கிலோ எடை கொண்ட அவை பொட்டலங்களாகக் கட்டப்பட்டிருந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. கடத்தல்காரர்களின் 4 இருசக்கர வாகனங்கள், இரண்டு வலைகளுடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கடத்தலுக்குப் பயன்படுத்த படகு பிரபல யூடியூபரான நாகை மீனவன் குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்கிறார்கள். கடல் உணவுகள், கடல்சார் மீனவர்கள் வாழ்வு உள்ளிட்டவைகள் குறித்து யூ டியூபில் வீடியோ பகிர்ந்து வரும் நாகை மீனவன் யூ டியூப் சேனலை சுமார் 6.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். கஞ்சா கடத்தல் விவகாரத்தில் அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.