தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னேற்றமான திரிக்கா-வின் (திருச்சி கார்பைன்) தொடர்ச்சியாக, 40 X 46 எம்எம் அன்டர் பேரல் கிரானைட் லான்ச்சர் (கையெறி குண்டு ஏவும் கருவி) மற்றும் ஏகே-47 துப்பாக்கி திருச்சிராப்பள்ளியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் 2021 ஜுலை 30 அன்று நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
திருச்சி ஆயுத தொழிற்சாலையின் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தில் தயாராகியுள்ள 40 X 46 எம்எம் உபகரணத்தை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய ஆயுத காவல் படைகள் மற்றும் மாநில காவல் படைகளில் பயன்படுத்தப்படும் திருச்சி அசால்ட் ரைஃபிள் (டி ஏ ஆர்) உடன் கூடுதல் வசதியாக இணைக்கலாம்.
ஏகே-47 துப்பாக்கிகளிலும் பயன்படுத்தக்கூடிய இந்த உபகரணம், எதிரி இலக்குகள் மீது அதிக சக்திவாய்ந்த குண்டுகளை வீசுவதற்காக பயன்படுத்தலாம். இதன் எல்லை 400 மீட்டர்கள் மற்றும் எடை 1.6 கிலோகிராம் ஆகும்.
பல்வேறு கையெறி குண்டுகளை பயன்படுத்தி தாக்கும் சக்தியை அதிகரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட இந்த கருவியை பயன்படுத்தும் ராணுவ வீரர், டி ஏ ஆர் மற்றும் ஏகே-47 ஆகிய இரண்டு துப்பாக்கிகளின் தோட்டாக்களையும் இதன் மூலம் பயன்படுத்தி, எதிரிகள் முன்னேறாமல் தடுக்க முடியும். பல்வேறு படைப்பிரிவுகளின் செயல்பாடுகளுக்கு இது உதவிகரமாக இருக்கும்.