செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்: ரூ.310 கோடியில் 11 ஆயிரம் வீடுகள்; பிரதமர் வீடு திட்டத்தில் கட்டுமானம் துவக்கம்!..

செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 310 கோடி ரூபாயில், 11 ஆயிரத்து 217 வீடுகள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பிரதமரின் ஆவாஸ் யோஜனா துவக்கப்பட்டது.

இத்திட்டம், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கணக்கெடுப்பு கடந்த 2018ல் நடத்தப்பட்டது, இந்த கணக்கெடுப்பின் கீழ் 30 ஆயிரத்து 651 வீடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், 2016 -17 மற்றும் 2019 – -20ம் நிதியாண்டில், 19 ஆயிரத்து 372 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.இந்த வீடுகளில் கழிப்பறை, குடிநீர் குழாய் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2021- 22ம் நிதியாண்டில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு, 11 ஆயிரத்து 217 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வீடு கட்டி கொள்வதற்கான பணி ஆணை, இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் தலா ஒரு வீடு கட்ட, 2.77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வீடு கட்டுமான பணிகளை, ஊரக வளர்ச்சி துறை ஒன்றிய மேற்பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த திட்டம் குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதம திட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களில், 11 ஆயிரத்து 217 வீடுகள் கட்டப்பட உள்ளன. பயனாளிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டு, பணிகள் துவங்கிஉள்ளன.ஆறு மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முடிக்க வேண்டும் என, பயனாளிகளுக்கு அறிவுறுத் தப்பட்டு உள்ளது என கூறினார்.
.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் செய்லபடுத்தப்படும் வீடுகளின் அளவுகள் :
மொத்தம் 269 சதுர அடி பரப்பில் கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது.= ஒரு ஹால், படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை ஆகியவை இடம் பெற்றிருக்கும்= வீடு கட்டுவதற்கு நான்கு தவணைகளாக தொகை விடுவிக்கப்படும்.= நுாறு நாள் வேலை திட்டத்தில், வீடுகள் கட்டுமான பணியை, பயனாளிகளே மேற்கொள்ளலாம். அவர்களுக்கு, 100 நாள் திட்ட ஊதியம் வழங்கப்படுகிறது.= கூரை மற்றும் இரண்டு உறிஞ்சுக் குழிகளுடன் கூடிய கழிப்பறை கட்டுவதற்கு தனியாக, 12 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

Exit mobile version