கடந்த 2014 மே 26-ம் தேதி பாரத நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற திரு. நரேந்திர மோடி அவர்கள் தீர்க்கவே முடியாது என்று சொல்லப்பட்ட பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மகத்தான சாதனை படைத்து வருகிறார். அதில் மிக முக்கியமானது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது.
1947-ல் பாரதத்துக்கு விடுதலை கிடைத்தபோது பல்வேறு சமஸ்தானங்கள் தனி நாடாக இருக்க விரும்பின. ஆனால், சுதந்திர பாரதத்தின் துணைப் பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் பெரும் முயற்சியால் முரண்டு பிடித்த சமஸ்தானங்கள் பாரதத்துடன் இணைக்கப்பட்டன. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் மன்னராக இருந்த ஹரிசிங், தனி நாடாக இருக்கவே விரும்பினார்.
ஆனால், அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வால்கர், காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கை நேரில் சந்தித்து பாரதத்துடன் காஷ்மீர் இணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதன்பிறகே காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க மன்னர் ஹரிசிங் சம்மதித்தார். ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நிலைமை கைமீறி போய்விட்டது. அதன் விளைவாக காஷ்மீரின் ஒரு பகுதி மட்டுமே (இன்றைய ஜம்மு – காஷ்மீர், லடாக்) பாரதத்துடன் இணைந்தது.
நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவையே அங்கீகரித்தார். அதன் விளைவாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு, காஷ்மீருக்கென தனிக் கொடி, காஷ்மீர் மாநில முதல்வரை பிரதமர் என்றழைப்பது என்று தனி நாடு போலவே அம்மாநிலம் இருந்தது. இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் கூட காஷ்மீர் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகே அங்கு நடைமுறைக்கு வர முடியும்.
இந்தியாவிலேயே பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத மாநிலம் ஜம்மு – காஷ்மீர் மட்டுமே. பெண்களுக்கான உரிமையும் அங்கு இல்லை.பல்வேறு மதங்கள், இனங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்தாலும் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வெற்றி பெறும் வகையில் உருவாக்கப்பட்டன. இதனால் ஜம்மு – காஷ்மீரின் ஆட்சி அதிகாரம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டுமல்ல, சில குடும்பங்களின் பிடியில் சிக்கித் தவித்தது. பழங்குடியினரும், பெளத்த மதத்தினரும் அதிகம் வாழும் பெரும் நிலப்பரப்பான லடாக் பகுதி மக்கள் எவ்வித அரசியல் அதிகாரங்களும், உரிமைகளும் இன்றி புறக்கணிக்கப்பட்டனர்.
அதனால்தான் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்று அந்த சட்டப் பிரிவு உருவாக்கப்பட நாள் முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன்பிறகு உருவான ஜன சங்கம் கட்சியும், பாஜகவும் வலியுறுத்தி வருகின்றன. ஜன சங்கம் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சியாம பிரசாத் முகர்ஜி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி பாரதத்துடன் முழுமையாக இணைய வேண்டும் என்பதற்காகப் போராடினார். அப்படியொரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். காஷ்மீருக்காக தனது தலைவரையே பலி கொடுத்த கட்சி பாஜக.
பாரதத்தின் ஒரு பிடி மண்ணும்கூட பாரதீயர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம். பாரத நாட்டின் ஒரு அங்குல நிலம் கூட பிரிந்து விடக் கூடாது என்பதுதான் பாஜகவின் உயிர்நாடிக் கொள்கை. விடுதலைக்குப் பின் பாரதத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளால் 70 ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி என்பதே இல்லை. ரத்தம் சிந்தாத நாளே இல்லை.
அதற்கு முடிவு கட்டவே கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா கொண்டு வந்த சட்டம் மூலம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மூர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
மத்திய பாஜக அரசு குறிப்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உறுதியான, துணிச்சலான, ராஜ தந்திரமான இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் ஆதரித்தனர். வரவேற்றனர். ஆனால், காஷ்மீரில் இனி ரத்த ஆறு ஓடும், அமைதியே இருக்காது. காஷ்மீரை பிரித்தது பிரதமர் மோடியின் சர்வாதிகாரம் என்றெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்தார்கள்.
ஆனாலும், மோடி அரசு எடுத்த உறுதியான, துணிச்சலான, அனைவரைும் அரவணைத்துச் செல்லும் சமூக நீதியான நடவடிக்கைகளால் கடந்த இரு ஆண்டுகளில் விதிவிலக்காக ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர்த்து காஷ்மீரில் அமைதி தவழ்கிறது. வீட்டு்ச் சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலும் அங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் ஜூன் 24-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள்), மெகபூபா முக்தி (மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்), குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ் மூத்த தலைவர்), ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட வேண்டிய முக்கிய நிகழ்வு என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
யாரெல்லாம் பிரதமர் மோடியை சர்வாதிகாரி என்று தூற்றினார்களோ, யாரெல்லாம் மத்திய பாஜக அரசின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்று நாளெல்லாம் பேசினார்களோ அந்தத் தலைவர்கள் எல்லாம் இப்போது மோடியின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுத்து, பாரத நாட்டின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்பது காஷ்மீர் மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.
சட்டத்தின்படி தொகுதி மறுவரையறை முடிந்து சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் 2019 ஆகஸ்ட் 5-ல் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த வாக்குறுதியின்படி ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடியுடனான மூன்றரை மணி நேர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர், “இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த நம்பிக்கையளிக்கிறது” என்று கூறியுள்ளனர்.
இன்னும் ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து பாரதத்தின் மற்ற மாநிலங்களைப் போல அம்மாநிலமும் ஜனநாயக நீரோட்டத்தில் இணையப் போகிறது. பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனை இது. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை. மோடி போன்ற தலைவரை பிரதமராக அடைய நாம் பெருந்தவம் செய்திருக்க வேண்டும்.