தொடர்ந்து நடைபெற்று வரும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இந்தியா இன்று எட்டியுள்ளது. தடுப்பு மருந்து வழங்கல் செயல்பாட்டின் 130-வது நாளில் 20 கோடி (15,71,49,593 முதல் டோஸ் மற்றும் 4,35,12,863 இரண்டாம் டோஸ் என மொத்தம் 20,06,62,456 டோஸ்கள்) எனும் அளவை நாடு கடந்துள்ளது என்று இன்று காலை ஏழு மணி அளவிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப் பெரிய தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையான இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி செயல்பாடு 2021 ஜனவரி 16 அன்று மாண்புமிகு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த எண்ணிக்கையை 130 நாட்களுக்குள் தொடும் இரண்டாம் நாடு இந்தியாவாகும். 20 கோடி டோஸ்கள் என்ற இலக்கை 124 நாட்களில் அமெரிக்கா தொட்டது.
கூடுதலாக, ‘அவர் வேர்ல்டு இன் டேட்டா’ மற்றும் பல்வேறு செய்தி கட்டுரைகளின் படி, தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் முன்னணியில் இருக்கும் நாடுகளான இங்கிலாந்தில் 168 நாட்களில் 5.1 கோடி டோஸ்கள் எனும் இலக்கு எட்டப்பட்டது, பிரேசிலில் 128 நாட்களில் 5.9 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டன, மற்றும் ஜெர்மனியில் 149 நாட்களில் 4.5 கோடி டோஸ்கள் எனும் இலக்கு எட்டப்பட்டது.
மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருக்கும் சமீபத்திய தரவுகளின் படி, இந்தியாவில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 34 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பு மருந்தை இதுவரை பெற்றுள்ளனர். அதேபோன்று, இந்தியாவில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 42 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பு மருந்தை இதுவரை பெற்றுள்ளனர்.