விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளை பகிர்ந்துள்ள அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், இந்த மக்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் விளங்கி வருகிறது. இதனால்,படிக்காதவர்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை தங்களது சொந்த மாவட்டத்திலேயே பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை வாய்ப்புகள் இருப்பதால் அங்கேயே வேலை பார்த்து வருகின்றனர். இதில், சுமார் 5 லட்சம் வரையிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மைக் காலமாக பட்டாசு ஆலையில் தொடர் வெடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இதில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு சுமார் 8 பேர் வரை உயிரிழந்தனர். இதே போல சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் சுமார் 5 பேர் வரை உயிரிழந்தனர். இந்த பட்டாசு ஆலை விபத்து சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால், பட்டாசு ஆலை வெடி விபத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
அதன்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்காக 15 ஆய்வுக் குழுக்களை அமைக்கப்பட்டதுடன் இன்று ஜூலை 14-ஆம் தேதி முதல் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த ஆய்வை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும், இந்த ஆய்வில் பட்டாசு தொழிற்சாலைகளில் விதி மீறல்கள் ஏற்பட்டிருந்தால் அந்த ஆலைகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
200 பட்டாசு ஆலைகள் மூடல்-வாழ்வாதாரம் பாதிப்பு
இந்த உத்தரவை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு பயந்து தங்களது பட்டாசு ஆலைகளை மூடினர். இதனால், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 200 பட்டாசு தொழிற்சாலைகள் நேற்று மூடப்பட்டன. இதனால், இந்த பட்டாசு தொழிற்சாலையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். தற்போது, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 8 லட்சம் தொழிலாளர்களும் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















