1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்… பிரதமர் சூர்யா கர் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

PM Modi's speech

PM Modi's speech

வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமர் சூர்யா கர்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் குறித்து இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி அமைக்கப்படும் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் பிரதமர் சூர்யா கர் எனும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் வலைதள பதிவில் அறிவித்துள்ளார்.

சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்கும் முயற்சியில், ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு ஒளியூட்டுவதை நோக்கமாகக் கொண்ட பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனாவை மத்திய அரசு தொடங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நீடித்த வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக ரூ.75,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இந்த திட்டம் குறித்த தனது பதிவில், ‘‘இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தேசிய ஆன்லைன் இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்படுவார்கள். தங்கள் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டு மேற்கூரை சோலார் திட்டத்தை பிரபலப்படுத்தும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் கவுரவிக்கப்படும். இந்த திட்டம் அதிக வருமானம், குறைந்த மின் கட்டணம் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும். மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தைக் குறைப்பதே எனது தலைமையிலான மக்கள் நல அரசின் நோக்கம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version