தமிழகம் முழுதும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குரோதம் சாட்டி வரும் நிலையில் ஒரே நாளில், தென்காசி மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர் உட்பட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். மது போதை உள்ளிட்ட காரணங்களால் நடந்துள்ள இந்த கொலை சம்பவங்கள், சட்டம் – ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளன.தமிழகத்தில் மது, கஞ்சா போதையில் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளும் கூட்டணி கட்சிகளே, இந்தக் கொலை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.அதேநேரத்தில், ரவுடிகளின் கொட்டங்களை அடக்க, அவ்வப்போது என்கவுன்டர், தினமும் நான்கு பேருக்கு கட்டு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
இருப்பினும், மது போதையிலும், கூலிப்படைகளாலும் நடக்கும் கொலைகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுதும் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
1.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லுாரைச் சேர்ந்தவர் வெளியப்பன், 52; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி மாரிச்செல்வி. கடந்த முறை மேலநீலிதநல்லுார் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனாக இருந்தார்.வெளியப்பன், மேலநீலிதநல்லுாரில் நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது.
2.சென்னை பெரும்பாக்கம், எழில்நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் இவர், நண்பர்களுடன் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச்சுக்கு நேற்று முன்தினம் இரவு சென்று, பின் கடற்கரையில் அமர்ந்து பேசியுள்ளனர்.
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஜெயராஜின் நண்பர்கள், நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் கத்தியால் அவரது வயிற்றில் குத்தி கொலை செய்து தப்பினர்.
கொலை நடந்த நேரத்தில் அங்கிருந்த, ஒரு நண்பரின் மனைவியான ஸ்னேகா, 25, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர். அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி வருவதால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, போலீசார் நேற்று இருவரை பிடித்தனர். கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.
3.கோவை மாவட்டம் சோமனுார் அடுத்த ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல், 26; பனியன் கம்பெனி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 46; கூலி தொழிலாளிஅங்குள்ள பெருமாள் கோவில் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு துரைசாமி துாங்க முயன்றதாகவும், அதற்கு கோகுல் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் போதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த துரைசாமி, கோகுலை கீழே தள்ளிவிட்டு, அருகில் இருந்த கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் வந்து, காயமடைந்த கோகுலை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கருமத்தம்பட்டி போலீசார் துரைசாமியை கைது செய்தனர்.
4.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாமோதரஹள்ளி, சின்னபாறையூரைச் சேர்ந்தவர் கண்ணாயிரம், அவரது தம்பி பழனி.அண்ணன், தம்பி இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது.அப்போது பழனியின் கழுத்து பகுதியில் கண்ணாயிரம் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். தடுக்க வந்த பழனி மகன் பெரியசாமிக்கு கையில் வெட்டு விழுந்தது. பாரூர் போலீசார் கண்ணாயிரத்தை கைது செய்தனர்.
5.கோவை உக்கடம் அடுத்த கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கோகுல், 30; செட்டி வீதியில் உள்ள நகைப்பட்டறையில், தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது அண்ணன் ரங்கன். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தனர். பின், கோகுல் தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
போதையில், கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் செல்வபுரம் அடுத்த அசோக் நகர், பாலாஜி அவென்யூ பகுதியில் நடந்து சென்ற போது, அங்கிருந்த கோகுலின் உறவினர் பிரவீன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். ஆத்திரமடைந்த பிரவீன், நண்பர்களை அழைத்து வந்து கோகுலை தாக்கினார். பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் கோகுலை சரமாரியாக குத்தி தப்பினர். ரத்தம் சொட்ட, சொட்ட சிறிது துாரம் நடந்து சென்ற கோகுல், அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வபுரம் போலீசார், கோகுல் உடலை மீட்டனர்.
6.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புழுதிக்குளத்தில், கோபால்சாமி, 40, என்பவர் முன் விரோதம் காரணமாக மே 30ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, மோகன், 48, பரமேஸ்வரி, சிலையம்மாள், வாணி உட்பட ஐந்து பேரை கீழத்துாவல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோகன் நிபந்தனை ஜாமின் பெற்று கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில் ஆக., 20 முதல் கையெழுத்திட்டு வந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு விட்டு கண்மாய் கரைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, டூ – வீலரில் சென்ற மூவர் அவரை வெட்டி சாய்த்தனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கீழத்துாவல் போலீசார் தப்பிய மூவரை தேடுகின்றனர்.