தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில், இந்திய விமானப்படையின் (IAF) 92-வது ஆண்டு கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், வீரர்களின் அணிவகுப்பு, பிரமிக்க வைக்கும் வான்வழி செயல்திறன் மற்றும் அதிநவீன உபகரணங்களின் கண்கவர் காட்சிகள் இடம் பெற்றன. முப்படைகளின் தலைமை தளபதி, ஜெனரல் அனில் சவுகான் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்று சிறப்பித்தார். வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் பார்வையிட்டார்.
விமானப் படைத் தலைவர் தனது உரையில், தேசிய நலன்களுக்கு சவால் விடும் எந்தவொரு தற்செயல் நிகழ்வையும் எதிர்கொள்ள, இந்திய விமானப் படை தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு சூழல், ஒரே சீரான மாறுபடும் நிலையில் உள்ளதுடன், தற்போதைய மோதல்கள் ஒரு வலுவான மற்றும் திறமையான விமானப்படையின், தவிர்க்க முடியாத தேவையை நிரூபித்துள்ளன என்றும் அவர் கூறினார். புதுமையான சிந்தனையுடன் சமீபத்திய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, இன்றைய பன்முக சூழலில், தீர்க்கமான பங்கை வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
விமானப்படை தினம் 2024-ன் கருப்பொருளான இந்திய விமானப்படை: திறமையான, வலுவான, தற்சார்பு இந்திய விமானப்படையின் விருப்பங்களை சரியாக விவரிக்கிறது என்று விமானப் படைத்தலைவர் ஏர்சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் வலியுறுத்தினார்.
பல ஆண்டுகளாக, நாங்கள் சிறந்த தொழில்நுட்பத்துடன் அதிக வலிமை பெற்றிருப்பதோடு நவீன ஆயுதங்களையும் பெற்றுள்ளோம். பாதுகாப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தித் துறையில் தற்சார்பு அடைவதே நமது முன்னுரிமையாகும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், புத்தொழில்கள், தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், ஆர் & டி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் முயற்சிகளை ஆதரிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விமானப்படை தினம் என்பது, விமானப்படை வீரர்கள் தேச சேவையில் தங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வதற்கும், முந்தைய ஆண்டின் செயல்பாடுகள் குறித்து சுயபரிசோதனை செய்வதற்கும், சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், முன்னேற்றத்திற்கான பகுதிகளை அங்கீகரிப்பதற்கும், தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப மறுசீரமைப்பதற்கும் ஒரு சந்தர்ப்பம் என்றும் அவர் விவரித்தார்.
கடந்த ஆண்டின் சாதனைகள் குறித்து குறிப்பிட்ட அவர், பல்வேறு முனைகளில் இந்திய விமானப் படை தனது திறமையை நிரூபித்துள்ளது என்றார். எங்கள் முதன்மை நோக்கங்களில் ஒன்று, இலக்கில், சரியான நேரத்தில், ஒவ்வொரு முறையும் ஆயுதங்களை வழங்குவதாகும், இந்த திறன் பிப்ரவரி 2024-ல் போக்ரான் வரம்பில் ‘வாயு சக்தி’ என்ற வான்திறன் சாகசத்தின் போது பொருத்தமாக வெளிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கூறுகையில், இந்த ஆண்டு நட்பு நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பயிற்சிகளில் இந்திய விமானப்படை தனது பங்கேற்பை விரிவுபடுத்தியது என்றார். இந்திய மண்ணில் மிகப்பெரிய பன்னாட்டு பயிற்சியான ‘தரங் சக்தி’ வெற்றிகரமாக நடத்தப்பட்டது இந்திய விமானப் படை வீரர்களின் திறமை மற்றும் தொழில்முறைக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண பணிகளில் இந்திய விமானப்படை எப்போதும் முதலில் பதிலளிப்பதாக, விமானப் படைத் தலைவர் குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்தில் நடத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
விமானப்படை வீரர்களுக்கு உகந்த மற்றும் பணிச் சூழலை உருவாக்குவதில், இந்திய விமானப் படை முழு உறுதிப்பாட்டுடன் இருப்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன் மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
அணிவகுப்பு
பெருமை, ஒற்றுமை, வலிமை மற்றும் உற்சாகத்தை அடையாளப்படுத்தும் குடியரசுத்தலைவரின் கொடியுடன் அணிவகுப்பு தொடங்கியது. முப்படைகளின் இசைக்குழு நிகழ்ச்சி மூலம், சூழல் இன்னும் இனிமையானதாக மாறியது, இது காற்று மண்டலத்தை, தேசபக்தி உற்சாகத்தில் ஆழ்த்தியது. விமானப்படை போர்ப் பயிற்சிக் குழு, பார்வையாளர்களை தங்களது கூர்மையான மற்றும் ஒத்திசைக்கப்பட்ட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு, அங்கிருந்த அனைவரிடமும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏர்ஷோ
அணிவகுப்பைத் தொடர்ந்து, இலகுரக போர் விமானங்கள், தேஜஸ், சுகோய்-30, எம்கேஐ மற்றும் பிலாட்டஸ் உள்ளிட்ட பல்வேறு ஜெட் விமானங்கள் தைரியமான குறைந்த அளவிலான வான் சாகசங்களை சூழ்ச்சிகளை நிகழ்த்தின. சூர்யகிரண் ஏரோபாட்டிக்ஸ் குழுவினரும், சாரங் ஹெலிகாப்டர் குழுவினரும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் மூலம், ரசிகர்களை மெய்மறக்கச் செய்ததால், சென்னையின் வானம் தேசியக் கொடியின் நிறத்தில் காட்சியளித்தது.
நிலையான காட்சி
இலகுரக போர் ஹெலிகாப்டர் (பிரசந்த்), சி -295 போக்குவரத்து விமானம், ஆகாஷ் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் எம்.கே-4, எச்.டி.டி-40 பயிற்சி விமானம் மற்றும் ரோகிணி ரேடார் சாதனங்களின் சாகசங்கள இடம்பெற்றன.
‘இந்திய விமானப்படை : திறமையான, வலிமையான, தற்சார்பு’ என்ற கருப்பொருளை உள்ளடக்கிய இந்திய விமானப்படையின் ஒரு நூற்றாண்டு கால அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான இணையற்ற சேவைக்கு இந்த நிகழ்வு பொருத்தமான மரியாதையாக இருந்தது.