அகிலேஷ் யாதவின் மனைவி, மகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு நேரெதிர் போட்டியாளராக திகழ்வது சமாஜ்வாதி கட்சி தான். இருந்த போதிலும், முன்னாள் எம்.பி டிம்பிள் யாதவ், அவரின் மகள் ஆகியோர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான சில நேரத்திலேயே டிம்பிளின் கணவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனைவி, மகளின் உடல்நிலை குறித்து விசாரித்திருக்கிறார்.மேலும், அகிலேஷ் குடும்பத்தினர் விரைவில் நலமடைய தனது வாழ்த்துக்களையும் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
டிம்பிள் யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததாவது, “நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன், அதன் முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. நான் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறேன். அறிகுறிகள் ஏதும் எனக்கில்லை. என்னுடைய மற்றும் பிறரின் நலன் கருதி தற்போது தனிமையில் இருந்து வருகிறேன்.சமீபத்தில் என்னை சந்தித்து சென்றவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
தடுப்பூசி போட மறுக்கும் அகிலேஷ்:
அதே நேரத்தில் அகிலேஷுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. டிம்பிள் யாதவ் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த போதிலும், அகிலேஷ் யாதவ் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. தனது தந்தை முலாயம் சிங் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நான் தடுப்பூசி செலுத்திக் கொள்வேன் என கூறியிருந்தார்.அதே போல அகிலேஷ் முன்னர் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில், “நான் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
எனவே எனக்கு மீண்டும் கொரோனா பாதிக்காது என கூறுகிறார்கள். அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசு தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்திற்கு பதிலாக தேசியக் கொடியின் படத்தை அச்சிட்டால் மட்டுமே நான் தடுப்பூசி செலுத்திக் கொள்வேன் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அகிலேஷ் யாதவ் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். வரும் நாட்களில் அவர் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















