பொங்கல் தொகுப்பு கொள்முதல் டெண்டரில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் விதிகளை மீறியுள்ளதாக லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. பல்வேறு இடங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தரமில்லாத பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பொங்கல் தொகுப்புகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் விதிமீறல் நடந்துள்ளதாக, லோக் ஆயுக்தாவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விடப்பட்டால், அது குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்கிற சட்டவிதிகள் உள்ள நிலையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் டெண்டர் விதிகளை கூட்டுறவுத் துறை அமைச்சரும், உணவுத்துறை அமைச்சரும் பின்பற்றவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் வழங்கிய பொருட்கள் தரமானதாக இல்லை என்றும், பொருட்கள் பேக்கிங் செய்த நாள், காலாவதியாகும் நாள் என எதுவும் இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டு இருப்பது, பெரும் ஊழலுக்கு வழி வகுத்திருப்பதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளதாகவும் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















