உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.
குறிப்பாக, இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன.இதன் காரணமாக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ, இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலிசபெத் ட்ரூஸ், அமெரிக்க பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங் என பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த பரபரப்பான உலக அரசியல் சூழ்நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் 2 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை இரவு இந்தியா வந்தார். அவர் நேற்று மாலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் செர்ஜி லாவ்ரோவ் சந்தித்து பேசினார்.
உக்ரைன் விவகாரம் இந்தியா வந்த பல்வேறு வெளிநாடு தூதர்களில் பிரதமர் மோடி சந்தித்த முதல் வெளியுறவுத்துறை மந்திரி ரஷியாவின் செர்ஜி ஆவார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்கள் இந்தியாவுக்கு வந்தபோதும் அவர்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரு நாட்டு வெளியுறவுத்துறை தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தைக்கு பின் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த செர்ஜி லாவ்ரோவ், இந்தியா வாங்க விரும்பும் எதையும் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். நாங்கள் நண்பர்கள். கச்சா எண்ணெய், ராணுவ தளவாடங்கள் மற்றும் இதர பொருட்கள் என அனைத்தையும் இரு நாடுகளும் அவரவர் பண நாணயங்களிலேயே (ரஷிய ரூபெல் மற்றும் இந்தியா ரூபாய்) வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















