”தி.மு.க., ஆட்சியின் ஊழல்களை, தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்,” என, தமிழக பா.ஜ.,வினருக்கு, அக்கட்சியின் தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ் ஆலோசனை வழங்கி உள்ளார்.
தமிழக பா.ஜ., மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம், திண்டுக்கல் மாவட்டம், பழனியில், 17, 18, 19ல் நடந்தது.அதில் பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் பொறுப்பாளர் முரளீதர ராவ், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர்.
அதில், சந்தோஷ் பேசி உள்ளதாவது: தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு, எட்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அந்த திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை, தமிழக பா.ஜ.,வினர், வீடுகள் தோறும் எடுத்து செல்ல வேண்டும்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் ஊழல்களை செய்துள்ளனர். அந்த ஊழல்களை, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். அவர் மட்டும் அல்லாமல், அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் தி.மு.க., அரசின் ஊழல்களை, மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மக்களின் அடிப்படை பிரச்னைகளை மையப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை பா.ஜ.,வினர் முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். தமிழக மக்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க ஆர்வமாக உள்ளனர். அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் முழு நேரமாக கட்சி பணியில் ஈடுபடுவதன் வாயிலாக, வரும் லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளில் பா.ஜ., உறுதியாக வெற்றி பெறும். இவ்வாறு சந்தோஷ் பேசியுள்ளார்.
source dinamalar….