குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தர உள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கட்சி கொறடா உத்தரவு ஏதும் செல்லுபடி ஆகாததால், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும். இருப்பினும் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளரில் யாரை ஆதரிக்கப்போகிறோம் என்ற நிலைப்பாட்டை கூறிவரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக பெரும் சலசலப்பை சந்தித்துள்ள சிவசேனா கட்சி வரும் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உத்தவ் தாக்ரே ராஜினாமா
மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்துவந்தது. உத்தவ் தாக்ரே தலைமையிலான இந்த ஆட்சிக்கு எதிராக கடந்த மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டனர். சிவசேனா பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூறியது.
இந்நிலையில், நெருக்கடி காரணமாக முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். அதேவேளை, ஏக்நாத் ஷிண்டே தரப்புடன் அவர் சமாதானம் செய்ய முன்வரவில்லை. இதையடுத்து, ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இந்த ஆட்சியின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். முன்னாள் முதலமைச்சரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசின் துணை முதலமைச்சரானார்.
பாஜகவுக்கு உத்தவ் ஆதரவு
இந்த பின்னணியில் வரும் ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் எம்பிக்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்ற குழப்பமான சூழல் நிலவி வந்தது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நிச்சயமாக பாஜக வேட்பாளர் முர்முவுக்குத்தான் ஆதரவு தருவார்கள் என்பது தெரிந்த நிலையில், உத்தவ் வசம் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், சிவசேனா கட்சியின் 16 எம்பிக்களின் ஆதரவு யாருக்கு என்பதை கடந்த சில நாள்களாக அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே ஆலோசனை செய்து வந்தார்.
கட்சி எம்பிக்கள் பெரும்பாலானோர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என உத்தவ்விடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் முர்முவையே ஆதரிக்க போவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் என்பதால் அவருக்கு ஆதரவு தருவதாக சிவசேனா கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தவ் தாக்ரேவின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சி பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் பின்னடைவை தந்துள்ளது.
SOURCE நியூஸ்18
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















