பகவத் கீதையில் கடவுள் கிருஷ்ணர், ஒருவர் புத்திசாலியாகவும், பெருந்தன்மையாகவும், தைரியமாகவும் இருந்தால் அவர் பிராமணர் என்று கூறியுள்ளதாகவும், அப்படியெனில் எந்த தேர்விலும் தேர்ச்சி பெறாத நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர் எனவும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பிராந்திய கல்வி நிறுவனத்தின் 60வது நிறுவன தின விழாவில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: ஹிந்து அமைப்பில் நான்கு வர்ணங்கள் உள்ளன. அவை ரத்தத்தின் அடிப்படையிலானது அல்ல, குணத்தின் அடிப்படையிலானது. ஆனால் ஜாதி என்பது ரத்தம் அடிப்படையிலானது. பகவத் கீதையில் கடவுள் கிருஷ்ணர், ஒருவர் புத்திசாலியாகவும், பெருந்தன்மையாகவும், தைரியமாகவும் இருந்தால் அவர் பிராமணர் என்று கூறுகிறார். அப்படியெனில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் அல்ல பிராமணர் என நம்புகிறேன். அவர் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பல டிகிரிகள் மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றதுடன் நமது அரசியலமைப்பிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர். ஏனெனில் நேரு எந்த தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை. அவரது குடும்பத்தினர் கூட பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நாட்டின் வரலாற்றை மீண்டும் உருவாக்கும் முக்கிய பணியை மேற்கொண்டுள்ளது. தற்போதைய பாடப்புத்தகங்களில் ஆங்கிலேயர்கள் அல்லது இந்திய ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. அவற்றின் புத்தகங்கள் ஆங்கிலேயர்களின் கருத்துகளை பிரதிபலிக்கின்றன.
இந்தியா துண்டு துண்டாக இருப்பதாகவும், அதை ஒன்றாக இணைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்றும், மேற்கு ஐரோப்பாவில் இருந்து ஆரியர்கள் வந்த போது திராவிடர்கள் இங்கு குடியிருந்தார்கள் என்றும் எழுதியுள்ளனர். இவை அனைத்தும் தவறான கருத்துகள். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே டி.என்.ஏ உள்ளது. அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இதனை பல்கலைக்கழகங்களின் மேம்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தகவல் தினமலர்.