கும்பகோணத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியதாவது:- காசிக்கு நேற்று முதல் சிறப்பு ரெயில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் ரெயிலானது ராமேஸ்வரத்திலிருந்து தமிழக மாணவர்கள் 216 பேருடன் சென்றது. சென்னையில் இருந்து வாரணாசிக்கு ரெயிலை வழி அனுப்புவதற்கு சென்னை ஐ.ஐ.டி. நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது முழுவதும் அரசு நிகழ்ச்சி. எனவே, பொதுமக்கள் இணைந்து காசி தமிழ் சங்க பயணத்தை ஒரு வெற்றி பயணமாக மாற்றுவது நமது கடமை. தொடர்ந்து, இன்னும் 11 ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. வரும் 19-ம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தமிழகத்திலிருந்து வந்துள்ள மாணவர்களை சந்தித்து பேசுகிறார்.
சுதந்திர அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி காசியில் நடக்கிறது. இதன் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரிகத் தொடர்பு மீண்டும் புதுப்பிக்கக்கூடிய வகையில் டிசம்பர் 16-ம் தேதி வரை ஒரு மாத காலம் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இது தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் தஞ்சை மாவட்டத்திலிருந்து செல்லும் மாணவர்களுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை வரை ரெயிலில் சென்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















