இந்திய ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பேச்சு சுதந்தித்திற்கு வரம்புகள் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உ.பி.யின் லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராணுவத்தை அவமதிப்பதெல்லாம் கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்று கறாராக கூறிவிட்டது.இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நிலவிய மோதல் குறித்து கடந்த கடந்த 2022ம் அண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி பேசியிருந்தார். அவரது பேச்சில் இந்திய ராணுவத்தை விமர்சிப்பதை போன்ற கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிராக ‘எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின்'(BRO) இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவாஸ்தவா புகார் அளித்திருந்தார் புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
காரை லக்னோவிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியது. இதில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்துதான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். வழக்கை இன்று நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனிநபரையோ அல்லது இந்திய ராணுவத்தையோ அவதூறு செய்யும் உரிமையை இந்த பிரிவு வழங்காது” என்று கூறியுள்ளனர்.
ராகுல் காந்தியின் கருத்துகள், இந்திய ராணுவத்தையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் இருந்ததாகவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. ராகுல் காந்தி வாதிடுகையில், “புகார்தாரர் ராணுவ அதிகாரி அல்ல. அப்படி இருக்கையில் எப்படி என் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பிருந்தார்.
ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 199(1)-ன் கீழ், குற்றத்தால் பாதிக்கப்பட்ட நேரடி நபரைத் தவிர மற்றவர்களும் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது. எனுவே இந்த வழக்கு விசாரிக்க தக்கதுதான். இந்த வழக்கில், BRO-வின் ஓய்வுபெற்ற இயக்குனர், தனது மன வேதனையை வெளிப்படுத்தி புகார் அளித்துள்ளார். எனவே அவர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர். சட்டப்படி புகார் அளிக்க முடியும். எனவே அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500-ன் கீழ் விசாரணை நடத்துவது சரியானது.
ராகுல் காந்தி ஊடகவியலாளர்களிடம் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அவரது மன்னிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் தெளிவாக இருக்கிறது” என்று கூறியுள்ளது.