சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடி, லஞ்ச ஒழிப்புத் துறை பதில் அளிக்க, ‘நோட்டீஸ்’ அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சி செய்த 1996 – 2001ம் காலகட்டத்தில் , பொன்முடி, அமைச்சராக பதவி வகித்தார். 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மாறியதும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மற்றும் மாமியார், நண்பர்களுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை 2002ல் வழக்குப் பதிவு செய்தது.
அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்தது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம். இதே தீர்ப்பை உயிநீதிமன்றமும் உறுதி செய்த்து. இதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, வழக்கு மீண்டும் விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது; 169 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், வழக்கை விரைந்து முடிக்க ஏதுவாக, 2022 மே மாதத்தில், நான்கு விடுமுறை நாட்களில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, உயர் நீதிமன்றத்துக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி கடிதம் அனுப்பினார். அதை உயர் நீதிமன்றம் நிராகரித்து, 2022 ஜூன் 7ல் உத்தரவிட்டது. அதோடு, மறு உத்தரவு வரும் வரை, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க தடையும் விதித்தது.
அதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களின் நிர்வாகத்துக்கான உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர், இந்த வழக்கை, வேலுாரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதிக்கு மாற்றும்படி உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு, 2022 ஜூலை 8ல் வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வழக்கை, வேலுார் நீதிமன்றத்துக்கு மாற்றி, உயர் நீதிமன்றம் அலுவல் ரீதியான உத்தரவை, ஜூலை 12ல் பிறப்பித்தது.
அதன்படி, ஜூலை 16ல், வேலுாருக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கை, மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா விசாரித்தார். வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து, தீர்ப்பு வழங்கினார். அதே மாதத்தில், பணி ஓய்வும் பெற்றார்.
தற்போது, இந்த வழக்கை, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கான எதிரான வழக்குகளை, உயர் நீதிமன்றத்தில் விசாரிப்பவர், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
விழுப்புரம் நீதிமன்றத்தில் பெரும்பாலும் விசாரணை முடியும் தருவாயில், வேலுார் நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றப்பட்டதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றிய நடைமுறையில் தவறு நடந்திருப்பதை உணர முடிந்தது.
இவ்வழக்கில் இறுதி வாதங்கள், 2023 ஜூன் 23ல் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டு, நான்கு நாட்களில், 226 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை, வேலுார் மாவட்ட முதன்மை நீதிபதி எழுத முடிந்ததும் கவனத்துக்கு வந்தது.
விசித்திரமாக நடந்த வழக்கு
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலுார் மாவட்ட முதன்மை நீதிபதியும், 2023 ஜூன் 30ல் ஓய்வு பெற்றுள்ளார். எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதால், வேலுார் நீதிமன்றத்தில் இருந்த வழக்கின் ஆவணங்களை வரவழைத்து பார்த்தேன்.
அவற்றை படிக்கும் போது, இந்த வழக்கில் வினோதமான நடைமுறையை, இந்த நீதிமன்றம் அனுமதித்தது குறித்து எழுந்த சந்தேகம் சரிதான் என்பது நிரூபணமானது.
ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பில் இருந்த இந்த வழக்கு, 2023 ஜூன் 6ல் சுறுசுறுப்பு எடுத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகி வரிசை கட்டி நின்றனர். அவர்கள் தரப்பு சாட்சியிடம், ஜூன் 6ல் விரைந்து விசாரணை நடந்தது. ஜூன் 23ல் எழுத்துப்பூர்வ வாதங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
நான்கு நாட்களில், 172 சாட்சிகள், 381 ஆவணங்களை பரிசீலித்து, 226 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை, வேலுார் மாவட்ட முதன்மை நீதிபதி பிறப்பித்துள்ளார்; ஜூன் 30ல் நீதிபதி ஓய்வு பெற்றார். இவற்றை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.
ஆவணங்களை ஆராய்ந்ததில், 2023 ஜூன் 7ல் இருந்து சட்டப்படியாக எதுவும் நடக்கவில்லை என்பது தெரிகிறது. சந்தேகத்துக்குரிய விசாரணை மாற்ற நடைமுறை, அதைத் தொடர்ந்து நடந்த விசாரணை மற்றும் தீர்ப்பு உள்ளிட்டவை சட்டவிரோதமானது என, என் கவனத்துக்கு வந்தது.
அதனால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ், எனக்குள்ள அதிகாரங்களை செயல்படுத்த முடிவெடுத்தேன். நீதி நிர்வாகத்தை குறைவுபடுத்தும் முயற்சி நடப்பதால், வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன்.
அவசரம் என்ன? பல கேள்விகள் எழுகின்றன…
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு தடை விதித்து, அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்க, உயர் நீதிமன்றத்துக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது?
மே மாதத்தில், நீதிமன்றத்துக்கான விடுமுறை நாட்களில், விசாரணை நடத்த அனுமதி கேட்டு, விழுப்புரம் நீதிபதி கடிதம் அனுப்பினார். அதற்கு, ஜூன் 7ல் அலுவல் ரீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஊழல் வழக்கை விசாரிக்க, விழுப்புரம் நீதிபதிக்கு தடை விதிக்க வேண்டிய அவசரம் என்ன?
நீதித் துறை பணிகளை மேற்கொள்ள தடை விதித்து, அலுவல் ரீதியான உத்தரவு பிறப்பிப்பது, இதுவரை கேள்விப்படாதது. கீழமை நீதிமன்றங்களின் நீதித் துறை நடவடிக்கையில், நீதித் துறை வாயிலாக குறுக்கிட முடியும். ஆனால், அலுவல் ரீதியாக குறுக்கிடுவது சட்டவிரோதம்.
ஒரு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கை, வேறு மாவட்டத்துக்கு மாற்ற, இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற நிர்வாக குழுவுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது?
குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற, உயர் நீதிமன்றத்துக்கு தான் நீதித் துறை அதிகாரம் உள்ளது. நிர்வாக ரீதியில், நீதித் துறைக்கான அதிகாரங்களை நீதிபதிகள் செயல்படுத்த முடியாது. அதுவும், நிர்வாக ரீதியிலான குறிப்பு வாயிலாக முடியாது. நிர்வாக அதிகாரத்தை, நீதிபதிகள் அனைவரும் சேர்ந்து ஒருமித்து தான் செயல்படுத்த முடியும்.
வேலுார் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியதற்கு, எந்த காரணமும் இல்லை. எனவே, நிர்வாக ரீதியில், நிலுவையில் உள்ள வழக்கை, வேறு மாவட்டத்துக்கு மாற்ற, இரண்டு நீதிபதிகளுக்கும் அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. அதனால், வழக்கை வேலுார் நீதிமன்றத்துக்கு மாற்ற, நிர்வாக ரீதியில் நீதிபதிகள் குறிப்பெழுதி உத்தரவிட்டது சட்டவிரோதமானது.
நீதிபதிகளின் குறிப்புக்கு, தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்திருப்பது சட்டப்பூர்வமானதா?
நீதித் துறையைப் பொறுத்தவரை, நீதிபதிகளில் முதலானவர் தலைமை நீதிபதி; நிர்வாகத்தைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்ற நிர்வாகம், தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வரும். யார் யாருக்கு எந்தெந்த வழக்குகளை ஒதுக்குவது என்பது, அவருக்கு உள்ள தனிப்பட்ட உரிமை.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு வழக்கை மாற்ற, நிர்வாக ரீதியான அதிகாரம், தலைமை நீதிபதிக்கு இல்லை. அதனால், நிர்வாக நீதிபதிகளின் குறிப்புக்கு ஒப்புதல் அளித்ததும், சட்டப்படியானது அல்ல.
எனவே, வழக்கு விசாரணையை வேலுாருக்கு மாற்றியது; அதைத் தொடர்ந்து நடந்த விசாரணை; 226 பக்க தீர்ப்பு எல்லாம், சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு அப்பாற்பட்டவை.
விசாரணை நீதிமன்றத்தின் சட்டவிரோதத்தால், நீதி பரிபாலனம் தோல்வியடைவது கவனத்துக்கு வரும்போது, அதை சரி செய்ய வேண்டியது, உயர் நீதிமன்றத்தின் கடமை. பொது மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதும் கடமை.
விளையாட்டு போட்டியில், ஒருபக்கத்துக்கு ஆதரவான நிலையை, நடுவர் எடுக்கிறார் என்ற எண்ணம், பொது மக்களுக்கு ஒருபோதும் ஏற்படக் கூடாது.
எனவே, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ‘நோட்டீஸ்’ பெற வேண்டும். பொன்முடி, அவரது மனைவிக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை, செப்டம்பர் 7க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவின் நகலை, தகவலுக்காக, தலைமை நீதிபதி முன் பதிவுத் துறை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















