பல கட்ட போராட்டங்களை தாண்டி ராம ஜென்ம பூமியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அயோத்தி ராமர் கோயில் கடந்த 22ஆம் தேதி குடமுழுக்குடன் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி முன்னிலையில் பால ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அற்புதமான நிகழ்வில் சாதுக்கள், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்
தினமும் லட்சக்கனனான பக்தர்கள் தற்போது அயோத்தி ராமரை தரிசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். ராமரை வழிபட்ட பின்னர், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது அனுபவத்தையும் கூறியுள்ளார் அரவிந்த கெஜ்ரிவால்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியதாவது: இன்று, நானும், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் எங்கள் குடும்பத்தினரும் அயோத்தியில் ராமர் கோயிலில் தரிசனம் செய்தோம். வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு அமைதியை உணர்ந்தோம் எனக் கூறினார்.
கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஜெய் ஸ்ரீ ராம்:
ராமர் கோயிலில் எடுத்த புகைப்படத்தை கெஜ்ரிவால் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று என் பெற்றோர் மற்றும் என் மனைவியுடன் அயோத்தி சென்று ஸ்ரீ ராமர் கோயிலில் தெய்வீக தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். ராமர் அனைவருக்கும் ஆசி வழங்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம். இவ்வாறு அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.