பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. ஜனநாயக திருவிழாவான பாரளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இரண்டு முறை தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக 3-வது முறையாகவும் தனி பெருபான்மையுடன் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மேலும் பிரதமர் மோடி பாஜக தனியாக 370 இடங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றாக வேண்டும் என உறுதியுடன் உள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் தேவந்திர பட்நாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக் மாண்டவியா, புஷ்கர் தாமி, பிரமோத் சவாந்த், பூபேந்திர யாத், ஜோதிராதித்யா சிந்தியா, கேஷவ் மவுரியா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாகவும்கரூர் அல்லது கோவை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்சித் தலைமை தன்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என்றார். அதேவேளையில், பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன். ஆனால் தன்னை பொறுத்தவரை சொந்த விருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.