பாரத பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து,டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவிற்கான பிரமாண்டமான ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 8000 பேர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 2 மணி நேரம் நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி சரியாக இரவு 7.15 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கும், இந்தியாவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களும் பதிவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும்,இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, சீஷெல்ஸின் துணைத் தலைவர் அகமது அஃபிஃப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’ மற்றும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு நெறிமுறைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பதவியேற்பு முடிந்த பின்னர் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் சிறப்பு விருந்திலும் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.
முக்கிய தலைவர்களை தவிர விழாவிற்கு வரும் அனைவரையும் 2 மணி நேரத்திற்கு முன்பு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக பதியேற்கப்போகும் அமைச்சர்களின் குடும்பங்களுக்கும் விழாவில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமருக்குப் பின்வரிசையில் கேபினட் அமைச்சர்கள் அமர்ந்திருப்பார்கள். மேலும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்களுக்கும் சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களைத்தாண்டி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ், திருநங்கைகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களில் பயனடைந்தவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையின்படி, “ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் இன்று 2024 ஜூன் 09 ஆம் தேதி இரவு 07.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைப்பார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 15 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளார் என்று இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18வது லோக்சபாவுக்கான முதல் பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.