தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின் (வயது 56). இவர் தென்ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ளார்.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அவர் அரசியல், சமூக பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருவதோடு, அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவர் கடந்த 2015ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் ‛நியூஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவரை சந்தித்துள்ளார். இவரது நிறுவனம் ஆடைகள் மற்றும் காலணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மகாராஜை சந்தித்த ஆசிஷ் லதா, தனக்கு 6 மில்லியன் ரேண்ட் (இந்திய மதிப்பில் ரூ.3.22 கோடி) தேவை உள்ளதாக தெரிவித்தார்.
அதாவது தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு லினன் துணிகள் வழங்க வேண்டும். இதற்காக இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்களில் லினன் துணி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான வரி செலுத்த பணம் தேவை உள்ளது என கூறியுள்ளார். ஆனால் மகாராஜ் யோசித்துள்ளார். பணம் கொடுக்க தயங்கி உள்ளார்.
இதையடுத்து ஆசிஷ் லதா ராம்கோபின் சில ஆவணங்களை காண்பித்துள்ளார். கையெழுத்திடப்பட்ட பர்சேஸ் ஆர்டர், இன்வாய்ஸ், நெட்கேரில் இருந்து பெறப்பட்ட டெலிவரி நோட் உள்ளிட்டவற்றை காண்பித்தார். இதை பார்த்த மகாராஜ்க்கு சந்தேகம் தொடர்ந்து இருந்தது. இருப்பினும் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால் ஆசிஷ் லதா ராம்கோபின் அவர் ரூ.3.22 கோடியை வழங்கினார்.
இந்த பணத்தை பெற்ற ஆசிஷ் லதா ராம்கோபின் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த வில்லை. இதற்கிடையே தான் அவர் போலி ஆவணங்களை காண்பித்து பணமோசடி செய்தது தெரியவந்தது. இதுபற்றி மகாராஜ் மோசடி புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தேசிய வழக்கு விசாரணை ஆணையத்தின் (NPA)பிரிகேடியர் ஹங்வானி முலாவுத்ஸி, ‛‛ஆசிஷ் லதா ராம்கோபின் போலியான ஆவணங்களை பயன்படுத்தி மோசடி உள்ளார். இதனால் அவரை குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். மேலும் குற்றச்சாட்டுகளுக்கான ஆவணங்களை வழங்கிய நிலையில் ஆசிஷ்லதா ராம்கோபினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அவர் தற்போது 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் வெளிவந்துள்ளார்.மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் மனித உரிமை ஆர்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களில் ஆசிஷ் லதா ராம்கோபின்னும் ஒருவர். இவரது தாய் எலா காந்தி தென் ஆப்பிரிக்காவில் பிரபலமானவர். இவரது பணிகளை பாராட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.