தற்போது தி.மு.கவில் வாரிசு அரசியலால் பல உட்கட்சி மோதல்கள் ஆரம்பித்துள்ளது. விழுப்புர மாவட்ட பகுதியில் பொன்முடி மகன் கவுதம் சிகாமணியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதே போல் திருச்சியில் கே.என் நேரு மகனின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அங்குள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுகொள்ளாமல் அரசு நிகழ்ச்சிகளுக்கும் அழைக்காமல் ஒதுக்கி வருகிறார் கே.என் நேரு. ஆனால் உதயநிதி ஸ்டாலினோ கே.என்.நேருவை ஓரம்கட்ட ஸ்கெட்ச் போட்டுள்ளார்.
உதயநிதி துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்றால், சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு ‘கல்தா’ கொடுக்க வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் உதயநிதி நிர்பந்தம் கொடுத்து வந்துள்ளார் அதில் முக்கியமானவர் கே.என் நேரு தானம். துரைமுருகனுக்கோ வயசு ஆகிவிட்டதால் அவரே ரிட்டையர்டு ஆகிவிடுவார் அதனால் எப்படியும் பேராசிரியர் அன்பழகன் மாதிரி ஓரம் கட்டிவிடலாம் என உதயநிதி தரப்பு முடிவெடுத்துள்ளது. ஆனால் கே.என் நேரு அப்படி இல்லை இன்னமும் தீவிர ஆக்டிவ் அரசியல்வாதியாக உள்ளார். திருச்சியில் இவரை தாண்டி தற்போது வரை யாரும் கோலோச்ச முடியவில்லை. உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அன்பில் மகேசுக்கும் கே.என்.நேருவுக்கும் ஏக பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததே.
அதன் காரணமாகவே, அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் அறிவிப்பு தள்ளிப்போவதாகவும் தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அப்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா; அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, ‘வெயிட் அண்டு சீ’ என, ஒரு வரியில் பதில் அளித்தார்.
அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய போதும், அதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்’ என்றார். இதையடுத்து, உதயநிதி துணை முதல்வராவார்; சில அமைச்சர்களும் மாற்றப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை மாற்றமும் துணை முதல்வர் பதவி அறிவிப்பும் தள்ளிப்போகிறது. இதற்கு, உதயநிதியின் நிர்பந்தமே காரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், அரசிலும் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக கோலோச்சுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தான் துணை முதல்வரானால், சீனியர்கள் எல்லாம் உதயநிதி சொல்படி நடப்பரா; அவர்களிடம் வேலை வாங்க முடியுமா என்ற சிந்தனையில் சின்னவர் ஆழ்ந்த யோசனையில் உள்ளாராம்.
அதனால், ‘மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கல்தா கொடுக்க வேண்டும்; அப்போது தான், துணை முதல்வராக பொறுப்பேற்பேன்’ என, முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி கண்டிஷன் போட்டுள்ளாராம் .இந்த பிரச்னை குறித்து, மூத்த அமைச்சர்கள் சிலரின் கருத்தை ஸ்டாலின் கேட்டுள்ளார். அப்போது, உதயநிதி துணை முதல்வராக மூத்த அமைச்சர்கள் பச்சைக்கொடி காட்டி உள்ளனர்.
உதயநிதி துணைமுதல்வராக பதவி ஏற்கும் போது கே.ஏன் நேரு இலாகா பறிக்கப்படும் என்கிறார்கள். தற்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக உள்ளார் நேரு. இந்த இலாகாபறிக்கப்பட்டு வேறு டம்மி இலாகா கொடுக்கப்படவுள்ளது. இதனால் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் கொதித்து போயுள்ளார்கள். திருச்சியை சுற்றியுள்ள தொகுதிகளில் இனி திமுக எப்படி வெற்றி பெரும் என பார்க்கத்தானே போகிறோம் என சூளுரைத்துள்ளார்கள். ஆம் கே.என் நேருவிடம் தான் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒப்படைக்கப்படும் அதை வெற்றிகரமாக செய்து வருபவர் தான் நேரு என்பது குறிப்பிடத்தக்கது. நேருவுக்கே இந்த நிலைமை என்றால் திமுகவின் அடிமட்ட தொண்டனுக்கு என்ன நிலைமையோ என திமுகவினர் புலம்பி வருகிறார்கள்.