உத்தரகண்ட் மாநிலத்தில்,முதல்வர் புஷ்கர் சிங்தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபைக்கு,கடந்த 2022ல் நடந்த தேர்தலின்போது பாஜக வெற்றிபெற்றால்,மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து,தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பா.ஜக ஆட்சி அமைத்தது.
ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், பொது சிவில் சட்டம் வரைவு அறிக்கையை தயார் செய்ய நிபுணர் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், 2022, மே 27ல் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின், 2024, பிப்., 2ல் விரிவான வரைவு அறிக்கையை அரசிடம் அளித்தது.
இதை தொடர்ந்து, புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., அரசு, உத்தரகண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டத்தை கடந்த ஆண்டு பிப்., 7ல் நிறைவேற்றியது. இதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.இந்நிலையில், உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது. முதல்வர் இல்லத்தில் உள்ள அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சட்டம் அமலுக்கு வருவதற்கான அறிவிப்பையும், அதை செயல்படுத்துவதற்கான விதிகளையும் முதல்வர் தாமி வெளியிட்டார்.
மேலும், திருமணம், விவாகரத்து மற்றும் ‘லிவ் இன்’ உறவுகளின் கட்டாய பதிவுக்காக துவங்கப்பட்டுள்ள இணையதளத்தை துவக்கி வைத்தார்திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்து பங்கீட்டில் அனைத்து மதத்தினருக்கும் இந்த சட்டமே பொருந்தும்.
இதில்,பட்டியலின பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அவரவர் மத சம்பிரதாயத்துக்கு ஏற்ப திருமணம் செய்யலாம். ஆனால், 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாவிட்டால், அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும்.
பொது சிவில் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்தால் ஆறு மாதம் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் ‘லிவ்- இன்’ முறை அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் திருமண தம்பதி போல, தங்கள் வாழ்க்கை ஏற்பாட்டை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.திருமணம் செய்யாமலே வாழும் ஜோடிக்கு பிறக்கும் குழந்தை, சட்டப்பூர்வமான குழந்தையாக கருதப்படும்.
ஒரு மாதத்துக்கு மேலாக லிவ்- இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள், அதை பதிவு செய்யாவிட்டால், அபராதம், சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.