”சுயசார்பு பாரதம்” என்பது தொலைதூர கனவாக இருக்காது!
விதைக்கும் போதே விலை நிர்ணயம் – விவசாயிகளே தீர்மானிப்பர்!
சத்தான உணவு வகைகளை கொத்தாக தயாரிப்போம்!!
கால்நடைகளை காக்க 53 கோடி தடுப்பூசி!!!
மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் கலங்கி நிற்கும் குடிமக்களின் கண்ணீரை போக்க மூன்றாவது நாளாக இன்றும் 11 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். வேளாண்மை, கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
”விதைக்கும் போது ஒரு விலை, விளைந்த பின் ஒரு விலை” என்பது விவசாயிகளின் நீண்ட நாள் வாழ்வியல் பிரச்சினையாக இருந்து வருகிறது. அவர் அதை தீர்க்க இரண்டு வழிகளை கையாண்டு இருக்கிறார். ஒன்று பொருளாதார திட்டத்தின் மூலமாக! இரண்டாவது சட்டத்தின் மூலமாக!! விளைந்த பொருட்களுக்கு விலை குறைவாக இருக்கும் போது, அவற்றை சேமித்து வைத்து லாபம் வரும்போது விற்கக்கூடிய வகையில் குளிர்பதன கிடங்குகளையும், சேமிப்பு கிடங்குகளையும், கொள்முதல் நிலையங்களையும் தங்களுடைய விளை நிலங்களுக்கு அருகாமையிலேயே உருவாக்கிட ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறார். விளைப்பொருட்களை நல்ல விலை கிடைக்கும் மாநிலங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்ய இருந்த தடைகளை நீக்க மத்தியில் சட்டம் கொண்டு வர இருப்பது வரவேற்கத்தகுந்த அம்சமாகும். அதுமட்டுமின்றி, விதைக்கும்போதே விவசாயிகளுடைய விளைப்பொருட்களுக்கான விலையை எந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்ய இருந்த தடையை நீக்கி, புதிய சட்டம் கொண்டு வந்திருப்பதும் ஏற்புடையதே!
கால்நடை வளம் என்பது வேளாண்மைக்கு இணையானது ஆகும். உலக அளவில் பால் உற்பத்தியில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். கால்நடைகளை எளிதாக தாக்கும் கோமாரி நோய் என்றழைக்கப்படக்கூடிய (Foot and Mouth Diseases) வியாதியே மழை, வெள்ள காலங்களில் கால்நடைகளில் மிகப்பெரிய உயிரிழப்புகளை உண்டாக்கக் கூடியதாகும். ரூபாய் 50,000 முதல் ரூபாய் 1,00,000 மதிப்புள்ள மாடுகள் மற்றும் பட்டிப்பட்டியாக ஆடுகளை இழக்கும் விவசாயிகள் கண்ணீர் மட்டும் விடுவதில்லை. தங்களுடைய உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் உண்டு. அதுமட்டுமல்ல, இதனால் பால் உற்பத்தியும் பெரும் அளவில் பாதிக்கப்படும். இப்பொழுது அந்த நோயை முன்கூட்டியே தடுப்பதற்காக 53 கோடி கால்நடைகளுக்கும் தடுப்பூசி (Foot And Mouth Diseases Trivalent Vaccine/Raksha Vaccine) போடுவதற்காக ரூபாய் 13,343 கோடி ஒதுக்கி இருக்கிறார். இது நடைமுறைபடுத்தப்பட்டால் இந்திய நாட்டினுடைய ஒட்டுமொத்த வருமானமும், தனிநபர் வருமானமும் (GDP) பல மடங்கு கூடும். லட்சக்கணக்கான குடும்பங்கள் கண்ணீர் கடலிலே இருந்து மீளுவார்கள்.
கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி செய்ய ரூபாய் 15,000 கோடி, அதேபோல, மருத்துவ குணமிக்க மூலிகை செடி, கொடி வகைகளை வளர்த்திட ரூபாய் 4,000 கோடி, தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க ரூபாய் 500 கோடி, மாநில அளவில், வட்டார அளவில் பிரசித்தி பெற்ற வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், அவற்றை சர்வதேச சந்தைப்படுத்தவும் ரூபாய் 20,000 கோடி என வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவித்திருக்கிறார். உள்ளூர் மீன் வளர்ப்பை பெருக்க ரூபாய் 11,000 கோடி மற்றும் மீன்பிடி படகுகளுக்கு காப்பீடு செய்ய ரூபாய் 9,000 கோடி என மீன்வளத்தை பெருக்கவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
கிராமப்புறங்களில் சத்தான உணவுகளை (NUTRITIOUS FOODS) கொத்தாக (CLUSTER) சேர்ந்து தயாரிப்பதற்காக ரூபாய் 10,000 கோடியை ஒதுக்கி உள்ளார். இதன் மூலம் கிராமப்புறங்களில் எண்ணற்றோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமல்ல தங்கள் பகுதிகளிலே அனைத்துவித சத்தான பொருட்கள் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். ஒட்டு மொத்தத்தில் நேற்றைய அறிவிப்புகளில் முக்கியமாக வேளாண்மை உள்கட்டமைப்பு, 53 கோடி கால்நடைகளுக்கும் தடுப்பூசிகள், வேளாண்மைப் பொருட்களை இந்தியா முழுமைக்கும் தாராளமாக கொண்டு செல்ல சட்ட விதிகளில் மாற்றம், சத்தான திண்பண்டங்களை உணவு வகைகளை கொத்தாக சேர்ந்து தயாரிக்க ”ஆக்கமும் ஊக்கமும்” என்ற திட்டங்கள் ஓரிரு நாட்களில் பலன் தராவிட்டாலும் கூட, ஓரிரு மாதங்களில் நல்ல பலனை தரும். விதைக்கும்போதே விலை நிர்ணயம் செய்ய ஏற்படுத்தி இருக்கக்கூடிய வாய்ப்புகள் வேளாண் துறையில் புதிய கதவுகளை திறக்கும்.
திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் நேற்றைய அறிவிப்புகள் கடந்த இரண்டு நாள் அறிவிப்புகளோடு இணைகின்றபோது பாரத பிரதமர் மோடி அவர்களின் ”சுயசார்பு பாரதம்” என்பது தொலைதூர கனவாக இருக்காது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















