மாலத் தீவுகளில் இருந்து 588 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ என் எஸ் ஜலஷ்வா மூலம் இன்று காலை கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்தனர்.
கொரோனா வைரஸ் நோய் பரவி வந்ததையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளி நாடுகளில் சிக்கியவர்கள் நாடு திரும்ப முடியவில்லை. இவர்கள் நாடு திரும்ப உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்திய அரசு அவர்களை இந்தியா அழைத்து வர கப்பற் படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலுக்கு உத்தரவிட்டது. இந்த கப்பல் கடந்த 15ம் தேதி 588 இந்தியர்களுடன் மாலத்தீவுகளின் தலைநகர் மாலேயில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை, புயல் காரணமாக கப்பல் 16ம் தேதிதான் புறப்பட்டது.
இந்த கப்பல் நேற்று காலை 11.30 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. பயணிகளில் , 6 கர்ப்பிணிகள் உள்பட 70 பெண்கள், இருந்தனர். இவர்களை கடற்படை மாநில அரசு, மாவட்ட நிர்வாகத்தினர், துறைமுக அதிகாரிகள் வரவேற்றனர். இவர்களுக்கு கோவிட் 19 தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் இவர்கள் அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.