பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் பின்வரும் நலத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது;
a) பிரதமர் வய வந்தனா திட்டத்தை (PMVVY) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு.
b) முதலில், 2020-21-இல் ஆண்டுக்கு 7.40 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட வருவாய்க்கு அனுமதி. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மறுநிர்ணயம்.
c) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட விகிதப்படி, நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் உறுதியளிக்கப்பட்ட வட்டி விகித ஆண்டு மறு நிர்ணயம், புதிய திட்ட மதிப்பீட்டுக்கிணங்க 7.75 சதவீத உச்சவரம்புக்கு மிகாமல் இருக்கும்.
d) எல்ஐசி-யால் உருவாக்கப்பட்ட சந்தை மதிப்பு (நிகரச்செலவு) வருவாய்க்கும், திட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட விகித வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு காரணமாக எழும் தொகைக்கான அனுமதி.
e) புதிய பாலிசிகளுக்கு, திட்டத்தின் முதலாண்டுக்கான நிதியில் ஆண்டுக்கு 0.5 சதவீதம் மேலாண்மைச் செலவுக்கு வரம்பாக நிர்ணயம். அதன் பின்னர், இரண்டாம் ஆண்டு முதல் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 0.3 சதவீதம் ஆக இருக்கும்.
f) ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் ஆண்டு வருவாய் விகிதத்தை மாற்றியமைப்பதை அனுமதிக்க நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குதல்.
g) திட்டத்தின் மற்ற அனைத்து விதிமுறைகளும் தொடர்ந்து அதேவிதமாக நீடிக்கும்.
ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,658 ஆக நிர்ணயம். திட்டத்தின் கீழ், மாதம் குறைந்த பட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடு ரூ.1,62,162 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நிதித் தாக்கங்கள்;
எல்ஐசி-யால் உருவாக்கப்பட்ட சந்தை மதிப்பு வருவாய்க்கும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட ஆண்டு விகிதம் 7.40 சதவீத வருவாய்க்கும் இடையிலான வேறுபாட்டு அளவுக்கு அரசின் நிதிப்பொறுப்பு இருக்கும். இது முதலாண்டுக்குப் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படும். இத்திட்டத்தைப் பராமரிக்க, ஆண்டுக்கு 0.5 சதவீதம் மேலாண்மைச் செலவுக்கு வரம்பாக நிர்ணயம். அதன் பின்னர், இரண்டாம் ஆண்டு முதல் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 0.3 சதவீதமாக இருக்கும். தற்போதைய நிலையில், அரசின் நிதிப்பொறுப்புச் செலவு 2023-24ஆம் ஆண்டில் ரூ. 829 கோடியாகவும், கடைசி நிதியாண்டான 2032-33-இல் ரூ.264 கோடியாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மானியம் திருப்பிச் செலுத்துதலுக்கான சராசரி நிதிப்பொறுப்பு, கணக்கிடப்பட்ட ஆண்டுக்கு செலுத்தும் தொகையின் அடிப்படையில் , திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.614 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வரும் புதிய பாலிசிகளின் எண்ணிக்கை, சந்தாதாரர்களின் முதலீட்டு அளவு, உருவாக்கப்பட்ட உண்மையான வருவாய், ஆண்டு செலுத்துதல் அடிப்படைக்கு ஏற்றவாறு, சரியான வட்டி-இடைவெளி (மானியம்) இருக்கும்.