நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, அடுத்த ஆண்டு நடக்க உள்ள, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., தன் முழு கவனத்தையும் திருப்பியுள்ளது.பீகார் சட்டசபை தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 125 இடங்களை பிடித்து, ஆட்சியை தக்க வைத்து உள்ளது. மேலும், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தை விட, அதிக தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. 74 தொகுதிகளில் வென்று, மாநிலத்தில், இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.பீகார் தேர்தலில் முஸ்லிம் தலைவர் ஒவைசி தனியாக நின்று 5 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றிவிட்டார் இதனால் சிறுபான்மை வாக்குகளை நம்பி இருந்த காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் ஒட்டுக்களை நம்பித்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. ஒவைசியும் தன இன மக்களின் ஆதரவை நம்பி போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
மேற்கு வங்காளத்திலும் இஸ்லாமியர்கள் ஓட்டினை நம்பித்தான் களமிறங்குகிறார் மம்தா பானர்ஜி.அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள்தான் மம்தாவின் பலம். அதனால் தான் குடியுரிமை சட்டம் 370 நீக்கத்துக்கு எதிர்ப்பு முத்தலாக் எதிர்ப்பு என இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக நினைத்து மத்திய அரசினை எதிர்த்து வந்தார்.
இந்த நிலையில் பீகாரில் தனியாக களமிறங்கிய ஒவைஸி தற்போது மேற்குவங்கத்தில் தனியாக நிற்பதாக கூறிவிட்டார். இது மம்தாவிற்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஓட்டு க்களை குறிவைத்து இறங்கிய ஒவைசிக்கு வெற்றி கிடைத்துள்ளது. மேலும் இசுலாமியர்கள் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவரை ஆதரிப்பது புது விஷயமும் இல்லை மேற்கு வங்கத்தில் கணிசமான இஸ்லாமியர்கள் ஓட்டை ஓவைஸி பிரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே போல் அமித் ஷா அங்கு களமிறங்கியுள்ளதால் பாஜக இந்த முறை மேற்கு வங்கத்தை தட்டி தூக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
கடந்த, 2016 வரை, இந்த மாநிலத்தில், பா.ஜ.க வுக்கு சொல்லும் படி எந்த வலுவும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், 42 தொகுதிகளில், 18ல் பா.ஜ.க வெற்றி பெற்று, மாநிலத்தில், இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கை, பா.,ஜ.க வுக்கு அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலத்தில், காங்கிரஸ், இடதுசாரி, திரிணமுல் கட்சிகளின் மூத்த தலைவர்கள், பா.ஜ.,வுக்கு தாவி வருகின்றனர்.சமீபத்திய பீஹார் தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சி, இப்போது தன் முழு கவனத்தையும், மேற்கு வங்கத்தின் மீது திருப்பியுள்ளது.