ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடி மீண்டும் பேசி உள்ளார். இந்திய அரசியல் சாசன நாளாக நவம்பர் 26 ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை ஒட்டி பேசிய பிரதமர், ஒவ்வொரு சில மாதங்களிலும் பல தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறையில் கொண்டுவந்து நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இரண்டு முறை தேர்தல் நடத்துவதால் இரண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது காலம், பொருள் மற்றும் மக்களின் உழைப்பு ஆகியவை வீணாவதாகவும் அந்த சக்திகள் வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு லோக்சபா, சட்டசபை அதிகாரிகளை உள்ளடக்கிய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே மோடி அவர்கள் இதை தெரிவித்து உள்ளார்.
பிரதமரின் திட்டம் அல்லது பிரதமரின் சூழ்ச்சி என்று யாரும் நினைக்கவேண்டாம். இதுகுறித்து 1960 ல் இருந்தே அவ்வப்போது பலராலும் எழுப்பப்படுவதும் பின்னர் அது மறக்கப்படுவதுமாக இருக்கிறது. 1983ல், தேர்தல் ஆணையம் தன்னுடைய வருடாந்திர அறிக்கையில் ஒரே நேரத்தில் நாடு தழுவிய மத்திய மாநில தேர்தல்களை நடத்துவது குறித்து பரிசீலிக்க பரிந்துரை செய்தது. இதை 1999ம் ஆண்டு சட்டக் கமிசனும் இதை வழிமொழிந்தது. ஆனால் போதிய ஆதரவு அல்லது கருத்து விவாதம் நடக்காத காரணத்தால் இத்திட்டம் கிடப்புக்கு போனது.
2014 தேர்தல் அறிக்கையில் பாஜக இதை ஒரு வாக்குறுதியாகவே கொடுத்து இருந்தது. 2016 ஆம் ஆண்டு இது குறித்து பேசப்பட்டது. ஆனால் அதை யாரும் விவாதிக்க ஆர்வம் காட்டாததால் அது கிடப்பில் போடப்பட்டது. 2018ஆம் ஆண்டு சட்டக்கமிசன் ஐந்து அரசியல் அமைப்பு திருத்தங்களை செய்தால் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமே என்று கூறியது. இன்று பிரதமர் மோடி இது குறித்து பேசியதால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மீண்டும் விவாதிக்கப்படலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.இது ஆர் எஸ் எஸ் அமைப்பின் சூழ்ச்சி என்று யாரும் நினைக்க வேண்டாம். அனைத்து கட்சிகளிலும் இதற்கு ஆதரவும் உண்டு எதிர்ப்பும் உண்டு.